இந்திய கிராமங்களுக்கு மிகப்பெரிய பலூன்கள் மூலம் இணையதள வசதி: கூகுள் அதிகாரி சுந்தர் பிச்சை தகவல்
இந்திய கிராமப் புறங்களில் மிகப்பெரிய பலூன்கள் மூலம் இணையதள சேவை தரும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பலூன் மூலம் இணையதள வசதி தரும் திட்டம் செல்ஃபோன் சேவைகளில் குறுக்கிட வாய்ப்புள்ளதால் இது குறித்த முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
வானில் மிதக்கும் மொபைல் ஃபோன் டவர்கள் போன்று இந்த பலூன்கள் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் ரயில் நிலையங்களில் வை ஃபை வசதியை தங்கள் நிறுவனம் அடுத்தாண்டு இறுதிக்குள் தரும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்தார். ரெயில் டெல் அமைப்புடன் இணைந்து இவ்வசதியை தர உள்ளதாக அவர் தெரிவித்தார்.
2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் பிரதமர் மோடியையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். மேலும் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் அவர் பேச உள்ளார். தமிழரான சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவன தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார்.