டெல்லியில், அப்துல் கலாம் தேசிய அறிவுசார் மையம் ‘விரைவில் அமைக்கப்படும்’ என மாநில மந்திரி தகவல்
டெல்லியில் விரைவில் அப்துல்கலாம் தேசிய அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று மாநில பண்பாட்டுத்துறை மந்திரி கபில்மிஸ்ரா தெரிவித்தார்.
இது குறித்து கபில்மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
அறிவுசார் மையம்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க டெல்லி மாநில அரசு, அப்துல்கலாம் முன்பு டெல்லியில் குடியிருந்த எண்.10, ராஜாஜி மார்க் இல்லத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவருடைய நூல்கள் உள்ளிட்ட உடமைகளை மீண்டும் டெல்லிக்கு எடுத்து வந்து டெல்லி மாநில அரசின் ஏற்பாட்டில் அப்துல்கலாம் அறிவுசார் மையம் நிறுவப்படும்.
மேலும், அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில் டெல்லியில் உள்ள ‘டெல்லி ஹாட்’ வளாகத்தில் பிரமாண்டமான கண்காட்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்திய மக்கள் அனைவராலும் போற்றப்பட்ட ஜனாதிபதியின் நினைவுகளை பொதுமக்கள் பகிர்ந்துகொள்ளும் வகையில் தற்காலிக இடமாக இது இருக்கும். சில மாதங்களுக்கு பிறகு என்றும் நிலைத்திருக்கும் வகையில் அறிவுசார் மையம் ஒன்று அமைக்கப்படும்.
மூவர் குழு அமைப்பு
கடந்த நவம்பர் 11–ந் தேதி டாக்டர் அப்துல்கலாமின் மூத்த சகோதரர் ஏ.பி.ஜே.முகமது முத்து மீரான்லெப்பை மரைக்காயர் டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தலைநகரில் ‘அறிவு தேடலுக்கான கலாம் தேசிய மையம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசால் ராமேசுவரத்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட அப்துல் கலாமின் உடமைகளை மீண்டும் டெல்லிக்கு கொண்டு வரும் ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக மூவர் குழு ஒன்றை டெல்லி மாநில அரசு அமைத்து உள்ளது.
எடுத்துவரப்படும்
இந்த குழுவினர் விரைவில் ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அவருடைய நூல்கள் உள்ளிட்ட உடமைகளை சரிபார்த்து அவருடைய குடும்பத்தினரை கலந்தாலோசித்து அவற்றை டெல்லிக்கு எடுத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.