நவம்பர் 28,29ம் தேதிகளில் மழை கொட்டப்போகுது... ஜாக்கிரதை: வானிலை இயக்குநர் ரமணன் எச்சரிக்கை
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழ்நாட்டில் 28,29 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 முதல் 24 செமீ வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகளினால் தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் தமிழகமே வெள்ளக்காடக மாறியுள்ளது. பல இடங்களில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் கடலூர் மாவட்டம் முற்றிலும் சிதைந்து போயுள்ளது. மழை விட்டும் சோகநிலை மாறாத நிலையில், மீண்டும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வு மைய இயக்குநர் ரமணன், தெற்கு அந்தமான் கடல்பகுதியில் இருந்த மேலடுக்கு சுழற்சி தாழ்வுநிலையாக மாறியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தென் கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தென் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.
டெல்டாவின் கனமழை டெல்டா மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறிய ரமணன், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றார். கடந்த 24 மணிநேரத்தில் செய்யாறில் 7 செ.மீ., மாமல்லபுரத்தில் 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது என்றும் ரமணன் கூறியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்கனவே பெய்த மழையால் பாதிப்பை சந்தித்துள்ள மக்கள் மற்றொரு பெருமழையை சந்திக்க தயாராகி வருகின்றனர். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாக சென்னை உட்பட தமிழக முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அரசு துறைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
நிரம்பி வழியும் நீர் நிலைகள் கடந்த 20 நாட்களாக பெய்த கனமழையால் தமிழகத்தில் பெரும்பாலான ஏரிகள், அணைகள் நிரம்பியுள்ள நிலையில், மீண்டும் மழை காரணமாக பெருத்த சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அணைகள், பெரிய ஏரி பகுதிகளில் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அணைகள், ஏரிகளுக்கு பாதுகாப்பு அணைகள் மற்றும் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பலவீனமான ஏரிகளின் கரையோர பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்குமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.