சோதனையில் சாதனை படைக்கும் பிரம்மோஸ் ஏவுகணை
அசுர வேகத்தில் பாய்ந்து சென்று, இலக்கை துல்லியமாக தாக்கவல்ல, 'பிரம்மோஸ்' ஏவுகணை, இந்திய கடற்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட, அதிநவீன, 'ஐ.என்.எஸ்., கொச்சி' கடற்படை கப்பலிலிருந்து, நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
தற்போது பயன்பாட்டில் உள்ள, உலகின் அசுர வேக ஏவுகணையாக திகழும் பிரமோஸ், இந்தியா - ரஷ்யா நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் உருவானது. நிலம், வான், போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பல் என, அனைத்து தளங்களிலும், இந்த ஏவுகணையை செலுத்தி, துல்லியமாக இலக்கை தாக்க முடியும்.
கடந்த 2014, ஜூனிலும், 2015, பிப்ரவரியிலும், 'ஐ.என்.எஸ்., கோல்கட்டா' கடற்படை கப்பலில் இருந்து, பிரம்மோஸ் வெற்றிகரமாக செலுத்தி சோதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, செப்டம்பரில், கடற்படையில் சேர்க்கப்பட்ட, ஐ.என்.எஸ்., கொச்சி கப்பலில் இருந்து, பிரமோஸ் நேற்று செலுத்தி சோதிக்கப்பட்டது. அரபிக் கடலில், 290 கி.மீ., தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த, கைவிடப்பட்ட கப்பலை இலக்காக கொண்டு, அசுர வேகத்தில் பாய்ந்து சென்ற பிரமோஸ், கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வழிகாட்டுதல் உதவியுடன், துல்லியமாக இலக்கை தாக்கி சாதனை படைத்தது. பிரம்மோஸ், 49வது முறையாக, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், பிரம்மோஸ் ஏவுகனையை ஆயுதமாக கொண்டு நிறுத்தப்படும், ஐ.என்.எஸ்., கொச்சி கப்பலின் அபார செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை வல்லமைக்கு மற்றொரு சாட்சியாக திகழும், ஐ.என்.எஸ்., கொச்சி, ஒரே சமயத்தில், 16 பிரம்மோஸ் ஏவுகணைகளையும், பிற அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 'சென்சார்'களையும் தாங்கிச் செல்ல வல்லது.