திறந்தநிலை பல்கலைக்கழக பட்டம்; பரிசீலிக்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவு
திறந்தநிலை பல்கலைக்கழக பட்டத்தின் அடிப்படையில், பதவி உயர்வு கேட்கும் ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலித்து, ஆறு வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., பணியாளர் வெங்கடேசன் உட்பட, நான்கு பேர் தாக்கல் செய்த மனு:நாங்கள், 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். பணியில் சேரும் போது, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி போதுமானது என, கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 1996ல், தலைமைச் செயலக ஊழியர்களுக்கு இணையாக, எங்களுக்கும் கல்வித் தகுதியை நிர்ணயித்து, அரசு உத்தரவிட்டது. அதன்படி, பதவி உயர்வு பெற, ஐந்து ஆண்டுக்குள் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
அதனால், திறந்தநிலை பல்கலையில், நேரடி பட்டப்படிப்பை குறித்த காலத்திற்குள் முடித்தோம். ஆனால், 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து பெறப்படும் பட்டப்படிப்பு மட்டுமே செல்லும்; அவ்வாறு படித்தவர்கள் மட்டுமே, அரசு பணிகளில் நியமிக்கப்படுவர்; பதவி உயர்வு வழங்கப்படும்&' என, 2009ம் ஆண்டு, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திறந்தநிலை பல்கலை பட்டப்படிப்பு செல்லும் என, பல்வேறு வழக்குகளில், உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த அடிப்படையில், எங்களுக்கும் பதவி உயர்வு வழங்கக் கோரி, அரசுக்கு மனு அளித்தோம்; எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மனுவை பரிசீலித்து, பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், மனுதாரர்களின் கோரிக்கையை, தகுதி அடிப்படையிலும், சட்டப்படியும் பரிசீலித்து, ஆறு வாரங்களுக்குள் தகுந்த உத்தரவை, டி.என்.பி.எஸ்.சி., பிறப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.