அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சரஸ்வதி வழிபாடு
நியூஜெர்சி: அமெரிக்கா, நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்துக்கள் வழிபாட்டிற்கென தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு ஒரு கோயில், இசைக் கருவிகள் மற்றும் இந்து மத நூல்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் தியானம் செய்யவும் வழிபாடு நடத்தவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டிலும் தியானத்திலும் மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் பங்கேற்று வருகின்றனர்.
இந்து மாணவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த வழிபாட்டு வசதியை இந்துக்கள் அல்லாத மாணவர்களும் வரவேற்றுள்ளனர். இந்த பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் யூத மாணவர்களுக்கென தனி வழிபாட்டு இடங்கள் உள்ளன.
1746ல் துவக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம், அமெரிக்காவிலேயே மிகப்பழமையான 4 பல்கலைக்கழகங்களில் ஒன்று. இங்கு பணியாற்றிய ஆசிரியர்களில் பலர் நோபல் பரிசு பெற்றவர்கள். 8 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் இந்த பல்கலையில் ஒரு கோடியே 40 லட்சம் நூல்கள் உள்ளன.