மருத்துவ நுழைவுத்தேர்வு;தமிழக முதல்வர்கடும் எதிர்ப்பு
மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புக்கு, தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தும், மத்திய அரசின் முயற்சிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
மருத்துவ பட்டப்படிப்புக்கு, தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு குறித்து பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, செய்தி வெளியாகி உள்ளது. இது, தமிழக மாணவர்களிடம் குழப்பத்தையும், விரக்தியையும், ஏற்படுத்தி உள்ளது. நகர பகுதி மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பொது நுழைவுத் தேர்வில், அவர்களது போட்டியை சமாளிக்க இயலாத, கிராமப்புற, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழை மாணவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை, தமிழக அரசு எடுத்துள்ளது.
பொது நுழைவுத் தேர்வை, ரத்து செய்யும் முடிவால், தகுதி வாய்ந்த, கிராமப்புற, பின்தங்கிய மாணவர்கள் பயன்பெறுவர்.பட்ட மேற்படிப்புகளில் சேர, கிராமப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வாழும் மலைப்பகுதிகளில் பணிபுரிந்தவருக்கு, தமிழக அரசு முன்னுரிமை வழங்குகிறது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில், பட்ட மேற்படிப்பை முடித்தவர்கள், மாநில அரசில் குறிப்பிட்ட காலம் பணியாற்ற வேண்டும் என, உறுதிமொழி பத்திரம் பெறப்படுகிறது. இதன்மூலம், அரசு மருத்துவமனைகளின் தேவையை சமாளிக்க முடிகிறது. இந்த முன்முயற்சிகளையும், சமூக பொருளாதார குறிக்கோள்களையும், நுழைவுத் தேர்வு முறை பயனற்றதாக்கி விடும்.
எனவே, தேசிய நுழைவுத் தேர்வு முறையை, மீண்டும் அறிமுகம் செய்ய முயற்சி மேற்கொண்டாலோ, இந்த தேர்வு முறையை, வேறு பெயரில் அறிமுகம் செய்ய முயன்றாலோ, அது மாநில உரிமையையும், தமிழகத்தின் மாணவர் சேர்க்கை கொள்கையையும் மீறும் செயலாகும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.