கேரளாவில் கழிப்பறை கட்ட ரூ.100 கோடி நிதியுதவி வழங்கினார் மாதா அமிர்தனந்தமயி
கேரளத்தில் கழிப்பறைகள் கட்டுதல், துப்புரவுப் பணிகள் ஆகியவற்றுக்கு ரூ.100 கோடி நிதியை அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டியிடம் மாதா அமிர்தானந்தமயி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
கேரள மாநிலம், கொல்லம் அருகே வள்ளிகாவு எனுமிடத்தில் உள்ள மடத்தில் மாதா அமிர்தானந்தமயியின் 62ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் கேரள ஆளுநர் பி. சதாசிவம், முதல்வர் உம்மன் சாண்டி, மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன், மத்திய அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா, மனோஜ் சின்ஹா, ஸ்ரீபாத் யசோ நாயக், இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர் பிரான்கோயிஸ் ரிசியர், கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில், ரூ.100 கோடிக்கான காசோலையை கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் மாதா அமிர்தானந்தமயி வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
இந்தியாவுக்கு 2 முகங்கள் உள்ளன. அதில் ஒரு முகம், வளர்ச்சி. 2ஆவது முகம், வறுமை. ஒரு பக்கத்தில், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட முன்னேற்றங்களால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மறுபுறம், வறுமை, கல்வியறிவின்மை, மோசமான சுகாதாரம், பெண்களுக்கு எதிரான குற்றம் போன்றவை நிலவுகின்றன.
சக்திவாய்ந்த நாடாகவும், ஆரோக்கியமான நாடாகவும் காண வேண்டுமெனில், மேற்கண்ட 2 முகங்களையும் ஒன்றாக்கி, அழகான முகமாக்க வேண்டும். அவ்வாறு நாம் செய்தால், இந்தியா வளர்ச்சியடைவதையும், அமைதி, நல்லிணக்கம், அபிவிருத்தி அடைவதையும் காண முடியும் என்றார் மாதா அமிர்தானந்தமயி.
இதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா', "கங்கையை சுத்தப்படுத்துதல்' ஆகிய திட்டங்களுக்கு ரூ.100 கோடி நிதியளித்துள்ளார் மாதா அமிர்தானந்தமயி.