ஐ.ஏ.எஸ்., சிவில் சர்வீஸ் தேர்வுமுறையில் மாற்றம் வல்லுனர் குழு அமைப்பு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வு
நமது நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக சிவில் சர்வீஸ் தேர்வு என்னும் ஆட்சிப்பணி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு முறையில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து சிவில் சர்வீஸ் தேர்வின் அனைத்து அம்சங்கள் குறித்து ஆராய்வதற்கும் வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சம வாய்ப்பு தருவதே நோக்கம்
இந்த குழுவின் பரிந்துரை அறிக்கையின்படி, சிவில் சர்வீஸ் தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். கணிதம், பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கத்தக்க வகையில் தேர்வு அமைப்பு முறையில் மாற்றம் கொண்டுவருவது முக்கிய நோக்கம் ஆகும்.
வல்லுனர் குழு பரிந்துரை அறிக்கை அளித்து, அதன்பேரில் மத்திய அரசு முடிவு எடுக்கிற வரையில், முதல் நிலை தேர்வில் தகுதி தேர்வாக ஜெனரல் ஸ்டடீஸ் தாள்–2 (சி.எஸ்.ஏ.டி. என்னும் சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் தேர்வு அதாவது திறனறி தேர்வு) நீடிக்கும். இதில் தகுதி மதிப்பெண்கள் 33 சதவீதம் ஆகும்.
ஆங்கிலம் விலக்கு
அதேபோன்று, கடந்த ஆண்டு முதல் நிலை தேர்வில், ஜெனரல் ஸ்டடீஸ் தாள் 2–ல், 22 மதிப்பெண்களை கொண்ட ஆங்கில பகுதியை மதிப்பெண் கணக்கிடும்போது, தகுதி பெற கருத்தில் கொள்வதில்லை என மத்திய அரசு எடுத்த முடிவு தொடர்ந்து அமலில் இருக்கும்.
வல்லுனர் குழுவில் யார்– யார்?
மத்திய அரசு அமைத்துள்ள வல்லுனர் குழுவுக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். பஸ்வான் தலைமை தாங்குவார். முன்னணி கல்வியாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், மூத்த அரசு அதிகாரிகள் இதில் இடம் பெறுவார்கள் என அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சிவில் சர்வீஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களை கொண்டுள்ளது.
முதல் நிலை தேர்வில் தலா 200 மதிப்பெண்களை கொண்ட இரண்டு கட்டாய தாட்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.