புதிய கல்விக்கொள்கை : டிசம்பருக்குள் திட்ட வரைவு இறுதி செய்யப்படும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உறுதி
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான திட்ட வரைவானது டிசம்பர் மாதத்துக்குள் தயார் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதலாக, கல்விக் கொள்கையானது தேசிய அளவில் மட்டுமே உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே பயனடைந்து வருகின்றனர்.
சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கு கல்வியின் முழு சாரமும் சென்றடைவதில்லை.
இதனைக் கருத்தில்கொண்டே, தற்போது மாநிலக் கல்வி அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
இந்தக் கல்விக் கொள்கைக்கான செயல்திட்ட வரைவானது வரும் டிசம்பர் மாதத்துக்குள் தயாராகிவிடும். அதற்கேற்ப, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
நமது கல்வி நிலையங்களையும், பாடத்திட்டங்களையும் சீரமைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அயல்நாட்டு கல்வி நிலையங்களில் உள்ள தொழில்நுட்பங்களை நமது மாணவர்களும் கற்க வழிவகைச் செய்ய வேண்டும்.
சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு நம் நாட்டின் கல்வி நிலையங்களை மேம்படுத்த வேண்டுமெனில், அவற்றை சீரமைப்பது அவசியம் என்றார் அவர்.