தீ விபத்தால் படிப்பை தொடர முடியாத பள்ளி மாணவி: முதல்வர் உதவ கோரிக்கை
தீ விபத்தில் சிக்கி காயமடைந்ததால் பள்ளிப் படிப்பை தொடர முடியாத மாணவி ஒருவர் தனக்கு முதல்வர் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளித்த மாணவி மீனாவின் தந்தை மண்ணாண்டி நிருபர்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட் டம் செய்யாறு வட்டம் புலிவலத்திலிருந்து வருகிறோம். 2 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் எங்கள் வீடு முற்றிலும் சேதமடைந்தது. அப்போது எனது மகள் மீனா(12) வீட்டுக்குள் சிக்கிக் கொண்டார். இவ்விபத்தில் மீனாவின் முகத்தில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.
தீவிர சிகிச்சை அளித்ததால் அவருக்கு தீக்காயங்கள் ஆறினாலும், முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள் போகவில்லை. இதற்கு சிகிச்சை செய்ய பல லட்சங்கள் செலவாகும் என்கிறார்கள். என் மகள் வளர வளர தோலின் தன்மை இன்னும் மோசமாகிறது. அவளால் கழுத்தைக் கூட திருப்ப முடியவில்லை. இப்போது, அவர் 10-ம் வகுப்பு படிக்கிறார். ஆனால், தனக்குள்ள பிரச்சினை காரணமாக பள்ளிக்குக் கூட போக மறுக்கிறார். எனது மகளின் சிகிச்சைக்காகவும், அவரது எதிர்காலத்துக்காகவும் முதல்வர் உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்