நெல்லை மாணவிக்கு வெள்ளை மாளிகையில் விருது
அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை சார்பில், சமுதாயத்துக்கு சிறப்பான சேவை புரிபவர்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இது, மிகவும் பெருமைக்குரிய விருதாகும்.
இந்த விருதுக்கு அமெரிக்கவாழ் இந்திய மாணவி ஸ்வேதா பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது பெறும் 11 இளம் பெண்களில் அவரும் ஒருவர் ஆவார். அவருக்கு வயது 15. அமெரிக்காவில், தாமஸ் ஜெபர்சன் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
ஸ்வேதா பிரபாகரனின் பூர்வீகம் திருநெல்வேலி ஆகும். அவருடைய தந்தை பெயர் பிரபாகரன் முருகையா. 1998-ம் ஆண்டில், அவர், தன் மனைவியுடன் அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ‘டெக்பெட்ச்.காம்’ என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள அஷ்பர்னில் வசித்து வருகிறார்.
அமெரிக்காவில், இண்டியானா போலீஸ் நகரில்தான் ஸ்வேதா பிறந்தார். தற்போது அவர் ‘எவ்ரிபடி கோட் நவ்’ என்ற லாப நோக்கில்லாத அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பு சார்பில், நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இன்டர்நெட் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் அறிவியல் தொழில்நுட்பம், என்ஜினீயரிங், கணிதம் ஆகியவை சார்ந்த பணிகளுக்காக ஆயிரக்கணக்கான டாலர் நிதியும் அந்த அமைப்பு திரட்டியுள்ளது.
எனவே, அடுத்த தலைமுறை இளைஞர்களை என்ஜினீயர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் முனைவோர் ஆக்குவதற்கு பணியாற்றியதற்காக, அவர் ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஸ்வேதாவின் கற்பித்தல் திட்டங்கள், சிறுமிகளை தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், வளரும் தொழில்நுட்ப மேதைகளாகவும் மாற்றி இருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில், அவர் உள்பட 11 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இளம்பெண்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க தொடர்ந்து பணியாற்றப் போவதாக ஸ்வேதா கூறியுள்ளார்.
ஸ்வேதா, கம்ப்யூட்டர் மீது மட்டுமின்றி பரத நாட்டியத்திலும் ஆர்வம் கொண்டவர். பல ஆண்டுகளாக பரத நாட்டிய பயிற்சி பெற்ற அவரது பரத நாட்டிய அரங்கேற்றம், கடந்த மாதம் 2-ந் தேதி நெல்லையில் நடைபெற்றது.