கூடுதலாக செலுத்திய வரி 10 நாளில் திருப்பி வழங்கப்படும்: வருமான வரித்துறை நடவடிக்கை
கூடுதலாக செலுத்திய வரியை 7 முதல் 10 நாட்களுக்கு திருப்பி கொடுக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆதார் அட்டை அல்லது இதர வங்கி தகவல்கள் மூலம் சரிபார்க்கும் முறை அமல்படுத்தப்பட்டிருப்பதால் எளிதாக திருப்பி கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
முன்பெல்லாம் அதிகம் செலுத்திய வரியை திரும்ப வாங்குவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. அதற்கு நீண்ட காலம் ஆனது. சிலருக்கு சில மாதங்களில் திரும்ப கிடைத்தது. பலருக்கு சில வருடங்களுக்கு பிறகே கிடைத்தது.
எலெக்ட்ரானிக் முறையில் சரிபார்க்கும் முறை கொண்டுவரப்பட்டிருப்பதால் திருப்பி கொடுப்பது எளிதாகி இருக்கிறது. கூடுதலாக பெறப்பட்ட வரி, குறைந்தபட்சம் ஒரு வாரமும், அதிகபட்சம் 10 நாட்களுக்குள்ளும் திருப்பிக்கொடுக்கப்படும். இந்திய வரி நிர்வாகத்தில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்று வருமான வரித்துறை அலுவலகம் தெரிவித்தது.
சமீபத்திய தகவல்களின் படி 2.06 கோடி வருமான வரித்தாக்கல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வந்திருக்கின்றன கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது ஆன்லைன் மூலம் வரிதாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 26 சதவிதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் 1.63 கோடி வருமான வரி தாக்கல் மனுக்கள் விண்ணப்பிக்கப்பட்டன.
செப்டம்பர் 7 வரை 45.18 லட்சம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 22.14 லட்சம் விண்ணப்பங்களுக்கு பணம் திருப்பி அனுப்பப்பட்டது.
பெரும் பாலான வரி செலுத்தியவர்களிடம் விசாரித்த போது 11 முதல் 13 நாட்களில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரி திரும்ப கிடைத்தது என்று தெரிவித்தனர்.
புதிய தொழில்நுட்பம் மூலம் வரிசெலுத்துபவர்களுக்கான சேவையில் மனித தலையீடு இல்லாமல் நேரடியாக நடக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இதன் மூலம் விண்ணப் பங்களை வேகமாக பரிசீலனை செய்யலாம்.
பணத்தையும் வேகமாக திருப்பி கொடுக்க முடியும் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.