தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ-சேவைகள் விவரம்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 337 இடங்களில் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.
இச்சேவை மையங்கள் மூலம் வருமானச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி நினைவு கலப்புத்திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம் ஆகிய மின் ஆளுமை அரசுசேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி இ-சேவை மையங்கள் மூலமாக பிளாஸ்டிக் ஆதார்அட்டை வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது,
ஆதார் அட்டை பெறுவதற்கு ஏற்கெனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகையை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் அரசு இ-சேவை மையங்களுக்குச் சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள 14 இலக்க பதிவு எண்ணைக் காண்பித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
ஒப்புகைச்சீட்டு பதிவு எண்ணைக் பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ. 40/- கட்டணம் வசூலிக்கப்படும்.
ஏற்கனவே ஆதார் எண் பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணைக் காண்பித்து ரூ. 30/- செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.