ஆதார் எண் இருந்தால் தான் இலவச லேப்டாப்
கடந்த ஆண்டுகளில், கணக்கு குளறுபடி ஏற்பட்டுள்ளதால், ஆதார் எண் இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்க வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு, கடந்த நான்கு ஆண்டுகளாக, பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவியருக்கு, இலவச லேப் - டாப் வழங்கி வருகிறது. ஆனால், பல பள்ளிகளில், லேப் - டாப் திருடு போவதாகவும், பல மாணவர்களுக்கு, லேப் - டாப் கிடைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இதுபற்றி விசாரணை நடத்தியதில், கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் கணக்கில் குளறுபடி செய்ததே புகார்களுக்கு காரணம் என தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த கல்வியாண்டில், லேப்-டாப் வழங்கும் முன், மாணவர்களின் பெயர், விவரம் மற்றும் ஆதார் எண்ணை, எல்காட் நிறுவனத்தின் இணையதளத் தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனாலும், இந்த விவரங்களை பதிவு செய்யாமலேயே, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் பல பள்ளிகளில், லேப் - டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனால், மீண்டும் லேப்-டாப் எண்ணிக்கை மற்றும் கணக்கு விவரங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
எனவே, லேப்டாப் வழங்கும் முன், மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை, இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை கடுமையாக்கி உள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாவட்டங்களுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து பள்ளிகளும், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் விவரங்களுடன், ஆதார் எண்ணைக் கண்டிப்பாக வாங்க வேண்டும். ஆதார் எண் விவரங்களை பதிவு செய்த பிறகே, லேப்டாப் வழங்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.