தமிழில் வணக்கம் கூறி, நெல்லை மாணவி கேள்விக்கு வீடியோ கான்பரன்சில் பதில் அளித்த பிரதமர்
ஆசிரியர் தினத்தையொட்டி, நெல்லையை சேர்ந்த 15 வயது மாணவியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி அவரது கேள்விக்கு விடையளித்தார். திருநெல்வேலி நீதிமன்றம் அருகேயுள்ள சங்கர் நகரில் வசிக்கும் கல்யாண குமாரசாமி மற்றும் சேதுராக மாலிகா தம்பதியின் மகள் விசாலினி.
பாளையங் கோட்டை லட்சுமி ராமன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்ற இவர் சிறுவயதிலேயே கம்ப்யூட்டர் துறையில் பல்வேறு கடினமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். இதை பாராட்டி, 15 வயதிலேயே ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பிடெக் முதலாம் ஆண்டில் பயில அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தினத்தையொட்டி இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஏற்பாட்டில், நாடு முழுவதும் பத்து மாநிலங்களில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விசாலினும் ஒருவர் என்பது சிறப்பு. ஒவ்வொரு, நகரிலுள்ள சிறந்த மாணவ, மாணவிகளிடம் பேசிக்கொண்டு வந்தபோது, நெல்லை மாணவியிடமும் பிரதமர் பேசினார். விசாலினி தனது பேச்சை, பிரதமருக்கு வணக்கம் என்று சொல்லி ஆரம்பித்தார். உடனடியாக, பிரதமர் மோடியும், வணக்கம் என்று பதிலுக்கு தமிழிலேயே தெரிவித்தார்.
விசாலினி கேட்டது: நான் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த வகையில் அந்த சேவை செய்யப்பட வேண்டும் என்று எனக்கு நீங்கள் வழிகாட்ட முடியுமா? பிரதமர் பதில்: ராணுவத்தில் சேர்ந்தோ, அல்லது அரசியலுக்கு வந்தோதான் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது இல்லை. நாட்டிற்கு சேவை ஆற்ற பல வழிகள் உள்ளன. பட்டமும், வேலையும் மட்டும்தான் நமது தேவை என்று நினைப்பதை நிறுத்த வேண்டும். நமது தேவை, பல்வேறு வகைகளிலான வெளிப்படையான, வித்தியாசமான சிந்தனைகள். வீட்டில் அநாவசியமாக செயல்படும் மின்சாதன பொருட்களை ஆஃப் செய்து, மின்சாரத்தை மிச்சம் பிடிப்பது கூட தேசத்துக்கு நீங்கள் செய்யும் சேவைதான். போதிய அளவுக்கு மட்டும் சாப்பிட்டுவிட்டு, உணவுகளை வீணாக்காமல் இருப்பதும் நீங்கள் நாட்டுக்கு செய்யும் சேவைதான்.