2கி எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்: ஆவணங்கள் தேவையில்லை
2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இணையதளம் மூலம் பதிவு செய்து சமையல் எரிவாயு இணைப்பை பொதுமக்கள் பெறுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சகாஜ் திட்டத்தை டெல்லியில் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 12 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பிற இடங்களுக்கு விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி இணையதளம் மூலம் விண்ணப்பிப்பவர்களின் விபரங்களை 48 மணி நேரத்திற்குள் சரிபார்த்து அருகில் உள்ள ஏஜென்சி மூலம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர், 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஏழை மற்றும் கிராமப்புற மக்களுக்கு அதிக பயன்னுள்ளதாக இருக்கும் என கூறினார். அவர்களுக்கு மேலும் உதவும் வகையில் இரண்டு கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தர்மேந்திர பிரதான் கூறினார். தற்போது சமையலுக்கு 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. மானிய விலையில் 418 ரூபாய்க்கு அரசு கொடுக்கிறது. 2013ம் ஆண்டு முதல் 5கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை 155 ரூபாய்க்கு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தற்போது இரண்டு கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.