53 சதவீத மார்க் பெற்றவர் சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம்
சமீபத்தில் முடிவு அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில், முதலிடம் பெற்றவர், 53 சதவீத மதிப்பெண்தான் பெற்றுள்ளார். யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஒவ்வொரு ஆண்டும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, அகில இந்திய நிர்வாகப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகின்றன.
இந்தாண்டில், தேர்வானவர்கள் பற்றிய விவரம் கடந்த, 4ம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்வு முறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டதாலும், கேள்விகள் கடுமையாக இருந்ததாலும், குறைவான மதிப்பெண்களே பெற முடிந்தது. முதலிடம் பிடித்த டில்லியைச் சேர்ந்த இரா சிங்கால், மொத்த மதிப்பெண், 2,025ல், 1,082 மட்டுமே பெற்றார். இது, 53.43 சதவீதம். இரண்டாமிடம் பெற்ற கேரளாவைச் சேர்ந்த ரேணு ராஜ், 1,056
மதிப்பெண்ணும், மூன்றாமிடம் பெற்ற டில்லியைச் சேர்ந்த நிதி குப்தா 1,025 மதிப்பெண்ணும் பெற்றனர்.
இதுகுறித்து, யு.பி.எஸ்.சி., மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
முதலிடம் பெற்றவருக்கு கிடைத்த மதிப்பெண்ணை வைத்து பார்க்கையில், நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர், எத்தகைய கடினமான தேர்வு முறையை எதிர்கொண்டுள்ளார் என்பது புலனாகும், என்றார்.