ஹைட்ரஜன் வாயு மூலம் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தது- திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்
ஹைட்ரஜன் வாயு மூலம் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கண்டுபிடித்துள்ளது.
அதிகளவில் கிடைக்கும் வாயுவான ஹைட்ரஜன் மூலம் மின்சாரம், எரிபொருள் உற்பத்தி செய்யும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. தற்போது ஹைட்ரஜன் வாயுவை கிராபைட்டில் வடிவமைத்த'புளோ சேனல்' கருவியில் செலுத்தி மின்சாரத்தை தயாரிக்கின்றனர். இதில் அரை லிட்டர் ஹைட்ரஜனில் ஒரு நிமிடத்தில் 2.7 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கிறது.
இதேமுறையில் கூடுதல் அளவு மின்சாரம் கிடைப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கல்லூரி ஆட்டோமொபைல் உதவி பேராசிரியர் அருண்குமார், மாணவர்கள் கார்த்திகேயன், லோகநாதன், தினேஷ், சுந்தர் கண்டுபிடித்துள்ளனர்.
பேராசிரியர் அருண்குமார் கூறியதாவது: புதிய தொழில்நுட்பத்தில் 'புளோ சேனல்' கருவியில் சில மாற்றங்களை செய்துள்ளோம். இதனால் அரை லிட்டர் ஹைட்ரஜனுக்கு ஒரு நிமிடத்தில் 3.8 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். ஒரு மணி நேரத்திற்கு 60 வாட்ஸ் கூடுதலாக கிடைக்கும். இதேமுறையில் கருவியில் அளவை அதிகரிக்கும்போது ஆயிரம் வாட்ஸ் வரை கூடுதலாக மின்சாரம் கிடைக்கும்.
மேலும் எளிதில் வெடிக்கும் வாயுவாக உள்ளதால் ஹைட்ரஜனை சேமிக்க முடியாது. இதனால் நீரில் இருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்கிறோம். மேலும் அவற்றை சேமிக்காமல் அப்படியே கருவியில் செலுத்தி மின்சாரம் தயாரிக்கிறோம். இதேமுறையில் வாகன எரிபொருளாகவும் பயன்படுத்தலாம், என்றார். அவர்களை கல்லூரி இயக்குனர் சரவணன், துறைத்தலைவர் வேல்முருகன் பாராட்டினர். தொடர்புக்கு 99446 99025.