சென்னையின் முதல் மெட்ரோ ரயிலை இயக்கிய பெண்!!!
சென்னையின் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டதற்காக மட்டுமல்ல, அதை இயக்கியது ஓர் இளம் பெண் ஓட்டுநர் என்பதற்காகவும் நினைவுகூரப்படும். ஆம், சென்னைவாசிகள் பலரின் எதிர்பார்ப்புக்கு இடையே ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 10.15 கி.மீ உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் முதல் மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை தொடங்கியது.
அந்த முதல் ரயிலை, ப்ரீத்தி (28) என்ற பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்த பெண் ஓட்டுநர் இயக்கினார். இது குறித்து பிரீத்தியின் தந்தை அன்பு, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "எனது மகள் ஒரு ரயில் ஓட்டுநராக வேண்டும் என்றே விரும்பினார். அவரது கனவு நனவாகியுள்ளது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டவுடனேயே ஏற்கெனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையை என் மகள் துறந்தார். சென்னை மெட்ரோவில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்தார். மெட்ரோ ரயில் ஓட்டுநராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என் மகள்தான். அவரைத் தொடர்ந்து மேலும் 3 பெண்கள் இப்பணிக்கு தேர்வாகினர்" என்றார். மெட்ரோ ரயில் ஓட்டுநராக தேர்வு செய்யப்பட்ட பிறகு சென்னை, டெல்லியில் பயிற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முறையான பயிற்சிகளுக்குப் பின்னர் இன்று தொடங்கப்பட்ட முதல் சேவையை, ப்ரீத்தி வெற்றிகரமாக இயக்கியுள்ளார். ப்ரீத்தி சென்னையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப் படிப்பை படித்தவராவார்.