வந்துவிட்டது ஸ்மார்ட் ஹெல்மெட்
இளைஞர்களை ஹெல்மெட் அணியவைக்க உதவும் வகையில் புதுமையான ஹெல்மெட் ஒன்று அமெரிக்காவில் தயாராகியுள்ளது. உலகத்திலேயே மிகச் சிறந்த ஸ்மார்ட் ஹெல்மெட் இதுதான் என்கிறார்கள்.
கபாலம் என்பதைக் குறிப்பிடும் வகையில் அதன் பெயர் ஸ்கல்லி ஏ.ஆர். 1 என அமைந்துள்ளது. இந்த ஹெல்மெட்டின் அறிமுக விற்பனை முடிவதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் நினைத்ததைவிட மூன்று மடங்கு அதிகமாக இந்த ஹெல்மெட் நிதியைத் திரட்டியுள்ளது, இன்னும் திரட்டிவருகிறது. பார்ப்பதற்குச் சாதாரண ஹெல்மெட் போன்று இருந்தாலும் இது சாதாரண ஹெல்மெட் அல்ல.
இதில் பல வசதிகள் உள்ளன. ரியர் வியூ கேமரா உள்ளது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உதவியால் பைக்கின் வேகம், பெட்ரோல்/டீசல் அளவு, திசை, காலர் ஐடி போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும். இதை பைக்கை ஓட்டிச் செல்லும்போதே பார்த்துக்கொள்ள முடியும். இந்த டிஸ்ப்ளே அதிக வெளிச்சம், தூசி, ஸ்க்ராட்ச் போன்றவற்றால் பாதிக்கப்படாது.
இந்த ஹெல்மெட் ப்ளுடூத் தொழில்நுட்பத்தின் உதவியால் ஸ்மார்ட் போனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் உதவியால் கூகுள் மேப் போன்றவற்றையும் பார்த்துக் கொள்ளலாம். வண்டியில் போகும்போது கால் பண்ணலாம், பாட்டுக் கேட்கலாம். ப்ளுடூத் உதவியால் ஸ்மார்ட் போனை இயக்க முடியும் என்பதால் இதில் எல்லாம் செய்துகொள்ள முடியும். எதிர்காலத்தில் இதைவிட அதிக வசதிகளை இந்த ஹெல்மெட்டில் தரவும் இதை உருவாக்கியுள்ள நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
ஒன்பது மணி நேரம் தொடர்ந்து இதிலுள்ள பேட்டரியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதை அமெரிக்காவுக்குள்ளும் உலகம் முழுவதிலும் பயன்படுத்திக்கொள்ள ஒப்புதலும் கிடைத்துள்ளது. இத்தனை வசதி இருப்பதால் இதன் விலையும் சிறிது அதிகமே. 1399 அமெரிக்க டாலர் செலவழித்தால்தான் இதை வாங்க முடியும். இதற்கான முன்பதிவு நடைபெற்றுவருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் தான் இந்த ஹெல்மெட் உங்கள் கைகளில் கிடைக்கும். கூடுதல் விவரங்களுக்கு http://www.skullysystems.com/#helmets என்னும் இணையதளத்தை நீங்கள் பார்க்கலாம்