இன்ஜியரிங் மாணவர்களுக்கு 11 வகுப்பு பாடம்
இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு, பிளஸ் 1 பாடங்களை நடத்த வேண்டும் என, கல்லுாரி பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது. பள்ளிப்படிப்பை முடித்து, புதிதாக பொறியியல் கல்லுாரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு, எப்படி பாடம் நடத்த வேண்டும்; அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து, பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலையில், பிரிட்ஜ் கோர்ஸ் என்ற. முன் தயாரிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 590 கல்லுாரிகளின், 2,000 பேராசிரியர் பங்கேற்றுள்ளனர். அப்போது, புதிதாக இன்ஜினியரிங் படிக்க வரும் மாணவர்களுக்கு, அடிப்படை கணித, இயற்பியல், வேதியியல் பாடங்கள் சரியாக தெரியவில்லை&' என, பேராசிரியர்கள் பலர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து, அண்ணா பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு முடித்து, மேல்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர், பிளஸ் 1 வகுப்பை பெயரளவிலோ அல்லது தேர்ச்சிக்காக மட்டுமோ படித்து விட்டு, இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடங்களையே படிக்கின்றனர். இதனால், இன்ஜினியரிங் வந்த பின், தடுமாறுகின்றனர். இன்ஜினியரிங் படிப்பில், முதல் ஆண்டில், பிளஸ் 1 பாடங்கள் அடிப்படையிலேயே, அதிக பாடங்கள் இருக்கும். பிளஸ் 1 படிப்பு இன்ஜினியரிங்குக்கு மிக முக்கியம். அதை சரியாகப் படிக்காமல் வருவதால், முதல் செமஸ்டரிலேயே தேர்ச்சி அடையாத சூழல் உள்ளது.
எனவே, இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு, பிளஸ் 1 பாடம் நடத்த அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
நாளை பொது கவுன்சிலிங் துவக்கம்
அண்ணா பல்கலையின் இன்ஜி., மாணவர் சேர்க்கை விளையாட்டுப் பிரிவு கவுன்சிலிங், நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. இதில், மொத்தமுள்ள, 3 சதவீத ஒதுக்கீடான, 5,137 இடங்களுக்கு, 219 பேர் அழைக்கப்பட்டனர்; 163 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
நேற்று மாலை, 7:00 மணியுடன், இந்த கவுன்சிலிங் முடிந்தது. இந்த பிரிவில் மீதமுள்ள, 5,000 இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படும். பொதுப்பிரிவு கவுன்சிலிங், நாளை துவங்குகிறது; வரும், 28ம் தேதி முடிகிறது.