பி.எட். பட்டப் படிப்பு இனி இரண்டாண்டு : தமிழக அரசு உத்தரவு
நடப்பாண்டிலேயே (2015-16) பி.எட். இரண்டாண்டு படிப்பை துவக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரிய கல்வியியல் பல்கலைக் கழகத் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறைச் செயலர் அபூர்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 2014-ல் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலில் இருந்து வந்த உத்தரவின்படி பெறப்பட்ட வழிகாட்டுதல்கள், விதிமுறைகளின்படி 2015-16 கல்வியாண்டிலேயே அனைத்துக் கல்வியியல் கல்லூரிகளிலும் இரண்டாண்டு பி.எட். படிப்பு அமல்படுத்தப்பட வேண்டும் என அதில் உயர்கல்வித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
இரண்டாண்டுச் சேர்க்கை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை இரண்டு ஆண்டுகளுக்கான பாடத் திட்டங்களை பல்கலைக் கழகம் அறிவிக்கவில்லை. மேலும் இரண்டு ஆண்டு எனில் அவை நான்கு பருவத் தேர்வுகளாக நடத்தப்படுமா அல்லது இரு ஆண்டு தேர்வுகளாக நடத்தப்படுமா என்பதும் தெரியவில்லை.
குழப்பமான சூழ்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் இது குறித்து தெளிவான விவரங்களை வெளியிட வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.