மாணவர்களின் புரிதலை அதிகரிக்கும் தாய்மொழி வழிக் கல்வி
ஆங்கிலத்தைக் காட்டிலும், தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம்தான் மாணவர்களிடம் புரிதல் தன்மை அதிகம் இருக்கும் என கல்வியாளரும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான வி.வசந்திதேவி கூறினார்.
எய்டு இந்தியா அமைப்பு சார்பில் "யுரேகா சிறந்த ஆசிரியர் விருது 2015' வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் வி. வசந்திதேவி பேசியது: யு.என்.டி.பி. வெளியிட்ட அறிக்கையில், மனித வளர்ச்சி திட்ட குறியீட்டில் (ஹெச்.டி.ஐ) மொத்தம் 187 நாடுகளில் இந்தியா 135-ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு இந்தியாவின் கல்வி முறையும் ஒரு முக்கியக் காரணமாகும்.
கல்வியில் முன்னணியில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறைவாக உள்ளது. எனவே, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்விக்கு அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருப்பினும் தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில், அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. எனவே, இதற்கான காரணங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.
மேலும், தாய் மொழியில் கல்வி கற்பதன் மூலம்தான் மாணவர்களிடம் புரிதல் தன்மை அதிகம் இருக்கும். எனினும், பள்ளிகளில் ஆங்கிலத்தில் படித்தால்தான் சிறப்பான கல்வியை மாணவர்கள் பெற முடியும் என்ற சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றார்.