வங்கிகளில் கல்விக் கடன் பெறும் வழிமுறைகள் ( GUIDELINES TO EDUCATIONAL LOAN )
வீட்டுப் பொருளாதாரத்துக்கு மட்டும் அல்லாமல், நாட்டின் பொருளாதாரத்துக்கும் கல்வி இன்றியமையாதது. மனித ஆற்றல் மேம்பாடு அடையாமல் ஒரு நாடு முன்னேற முடியாது.
ஆகையால்தான், எல்லோருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், எளிய குடும்பத்துக் குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல் தொடக்கக் கல்வி வழங்கப்படுகிறது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை, எளிய குடும்பத்துக் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் சத்துணவுத் திட்டம் நாட்டின் பல பகுதிகளில் பெரிய அளவில் செயல்படுத்தப்படுகிறது.
ஆனால், சாதாரண மாணவர்களுக்கு கல்லூரிப் படிப்பு இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. 100 பேர் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றால், 14 அல்லது 15 பேர் மட்டுமே கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்குச் செல்கிறார்கள். காரணம், கல்லூரிப் படிப்புக்கான செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதுதான்.
இந்த நிலையில், பண வசதி இல்லாதது உயர்கல்வி படிப்பதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில், அரசும், ரிசர்வ் வங்கியும் மேற்கொண்டுள்ள முடிவுக்கு இணங்க, கல்விக் கடன் திட்டத்தை வங்கிகள் செயல்படுத்துகின்றன.
இதற்கு ஏதுவாக, மாணவ - மாணவிகளின் மேற்படிப்புக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கென ஒரு "மாதிரி (மாடல்) கல்விக் கடன் திட்டத்தை இந்திய வங்கிகள் சங்கம் (Indian Banks Association) உருவாக்கி வங்கிகளுக்கு வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு கடன் வழங்கப்படுகிறது. பள்ளிக் கல்வியை சிறப்பாக முடித்து, அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை அனுமதி பெற்ற மாணவர்கள் அனைவரும் வங்கியிலிருந்து கல்விக் கடன் பெறலாம்.
கலை, வணிகம், அறிவியல், பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், கணினி, நிர்வாகவியல், பட்டய கணக்காளர், பைலட், கப்பல் பொறியாளர், பள்ளி ஆசிரியர், கல்லூரிப் பேராசிரியர், செவிலியர் பணி உள்ளிட்ட வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய படிப்புகளுக்கு கடன் தரப்படுகிறது. இவை தவிர, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கும் கடன் வழங்கப்படுகிறது.
ஒரு முக்கிய நிபந்தனை என்னவெனில், சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்கள் உரிய அமைப்புகளால் (அரசு / பல்கலைக்கழகங்கள் / UGC / AICTE / AIBME / ICMR) மற்றும் CIMA லண்டன், CPA (USA) உள்ளிட்ட வெளிநாட்டு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
உள்நாட்டில் பயில்வதற்கு ரூ.10 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் பயில்வதற்கு ரூ.20 லட்சம் வரையிலும் கடன் கிடைக்கிறது. ரூ.4 லட்சம் வரை கடன் வாங்கினால் மார்ஜின் தொகையை மாணவர்கள், பெற்றோர்கள் செலுத்தத் தேவையில்லை (மார்ஜின் என்பது வங்கியில் கடன் வாங்குபவர்கள், தேவையான தொகையில் ஒரு சிறிய பகுதியை தாங்களே செலுத்த வேண்டும் என்கிற நியதி).
ரூ.4 லட்சத்துக்கு அதிகமாகக் கடன் பெறும்போது, மார்ஜின் தொகை 5 சதவீதம் மட்டுமே. வெளிநாடுகளுக்குச் சென்று மேல்படிப்பு பயில்வதற்குக் கடன் வாங்குபவர்கள் 15 சதவீத மார்ஜின் தொகை செலுத்த வேண்டும்.
ஒரு மாணவர் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் முழு காலத்துக்கும், என்னென்ன கல்விச் செலவுகள் உண்டோ அதற்கு முழுமையாகக் கடன் கிடைக்கும். உதாரணமாக கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், புத்தகச் செலவு, விடுதிக் கட்டணம், வாகனச் செலவு, கருவிகள் வாங்குவதற்கான செலவு என கல்வி தொடர்புடைய அனைத்துச் செலவினங்களுக்கும் வங்கிக் கடன் கிடைக்கும்.
ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு கணினி அவசியம் என்றால் நியாயமான விலையில் கணினி வாங்குவதற்கும் கடன் கிடைக்கிறது. மேற்கூறிய செலவுகளைப் பட்டியலிடும்போது உதவித் தொகை கிடைக்கும் என்றால் அந்தத் தொகையை செலவுத் தொகையிலிருந்து கழித்துக் காட்ட வேண்டும்.
நிர்வாக ஒதுக்கீட்டிலிருந்து சேர்க்கை அனுமதி கிடைத்திருந்தால், அரசுக் கல்லூரியில் அதே படிப்புக்கு என்ன கட்டணம் உண்டோ அதுதான் கடனாகத் தரப்படுகிறது. கல்விக் கடன் வாங்குவதற்கு வங்கியை அணுகும்போது கீழ்க்கண்ட ஆவணங்களை ஒரே முறையில் எடுத்துச் சென்றால், வங்கியாளர்கள் நம்மை அலைக்கழிக்கிறார்கள் என்று நினைக்கும் நிலை ஏற்படாது.
கல்லூரி சேர்க்கைக்கான கடிதம், கல்விச் சான்றிதழ், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (ஆதார் அட்டை / குடும்ப அட்டை), முழு படிப்புக்கும் கல்லூரிக் கட்டணங்களின் ஆண்டு வாரியான பட்டியல், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ரூ.7.5 லட்சத்துக்கு அதிகமான கடனுக்கு மட்டும் செக்யூரிட்டி பற்றிய தகவல் ஆகியவையே கல்விக் கடனுக்குத் தேவையான ஆவணங்கள்.
கல்விக் கடன் என்றவுடன், எல்லோரையும் கலக்கத்துக்கு உள்ளாக்குவது "செக்யூரிட்டி என்கிற பிணையம் பற்றிய விஷயமே. உண்மை நிலை என்ன என்று பார்த்தால், ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு எந்தவிதப் பிணையமும் (செக்யூரிட்டி) தேவையில்லை. எந்த வங்கி அதிகாரியாவது அதுபோன்ற கல்விக் கடனுக்கு செக்யூரிட்டி கேட்டால் அது விதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானது.
ரூ.4 லட்சத்துக்கு மேல், ரூ.7.50 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு, அந்தத் தொகைக்கு சமமான மதிப்புடைய ஒரு நபரது உத்தரவாதம் தேவை.
ரூ.7.50 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெறுவோர், கடன் தொகைக்கான மதிப்புடைய சொத்துகளை பிணையாக வங்கியிடம் கொலட்டரல் செக்யூரிட்டியாக தரவேண்டும். இந்த சொத்துகள் வீடாகவோ, நிலமாகவோ மட்டுமே இருத்தல் வேண்டும் என்றில்லை. அந்த சொத்துகள் அரசுப் பத்திரங்கள் / பொதுத் துறை நிறுவனங்களின் பத்திரங்கள் / UTI யூனிட்டுகள் / தேசிய சேமிப்புப் பத்திரங்கள் (NSS) / கிசான் விகாஸ் பத்திரங்கள் / ஆயுள் காப்பீட்டுப் பாலிசி / தங்கம் / பங்குகள் / மியூச்சுவல் ஃபண்டு யூனிட்டுகள் / நிறுவன கடன் பத்திரங்கள் (டிபென்சர்) / வங்கி வைப்புத் தொகைகளாக (மாணவர் / பெற்றோர் / பராமரிப்பாளர் ஆகியோர் பெயரில்) இருக்கலாம்.
ஒரு வங்கியின் பேஸ் ரேட் பிளஸ் 2 சதவீதமாக இருக்கும். இது வங்கிக்கு வங்கி மாறும். பெரும்பாலான வங்கிகளில் தற்சமயம் பேஸ் ரேட் 10 முதல் 10.25 சதவீதமாக இருக்கிறது. அதே நேரம் பெண்களுக்கு, தலித் மற்றும் பழங்குடியினர், ஐ. ஐ.டி. மாணவர்களுக்கு வட்டி விகிதம் பேஸ் ரேட் பிளஸ் 1.50 சதவீதம்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட பாரதிய மகிளா (மகளிர்) வங்கியில் பெண்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடனுக்கு ஒரு சதவீத வட்டி குறைவு என்பது மகளிருக்கு நல்ல செய்தி.
கடனைத் திரும்பச் செலுத்தும்போது வட்டி கட்டினால் போதுமானது. வட்டிச் சுமை குறைந்தால் நல்லதுதானே என்று கருதுபவர்களும், அதற்கான வசதியும் உள்ளவர்கள் கடன் பெற்றவுடன் வட்டியை செலுத்தலாம்.
படித்து முடித்து வேலையில் சேர்ந்த 6 மாதங்களுக்குள், அல்லது படிப்பு முடிந்த ஓராண்டுக்குப் பிறகு, இதில் எது முன்னதாக நிகழ்கிறதோ, அப்போது மாதத் தவணைகள் மூலம் கடன், வட்டியை திரும்பச் செலுத்தலாம்.
ரூ.7.50 லட்சம் வரை கடன் பெற்றவர் 10 ஆண்டுகளுக்குள் கடனையும், வட்டியையும் திரும்பச் செலுத்த வேண்டும். ரூ.7.50 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றவர்கள் 15 ஆண்டுகளில் கடனையும், வட்டியையும் திரும்பச் செலுத்த வேண்டும்.
கடன் தொகைக்கு சமமான தொகைக்கு மாணவர் பெயரில் காப்பீடு பாலிசி எடுத்து அதனை வங்கியின் பெயரில் ஹள்ள்ண்ஞ்ய் (எழுதி வைத்தல்) செய்ய வேண்டும். படிப்புக் காலம், கடனைத் திருப்பச் செலுத்துவதற்கு தரப்பட்டுள்ள காலத்துக்கு பாலிசி எடுக்க வேண்டும். கல்விக் கடனுக்கு பரிசீலனைக் கட்டணம் (Processing charges) ஏதும் கிடையாது.
கல்விக் கடனுக்காக மேற்கூறிய விதிமுறைகளின்படி, ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்விக் கடன் பெறலாம்.
பெற்றோருக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போல் வேறு கடன்கள் இருந்தாலும், அந்த பெற்றோரின் மகன்களுக்கும், மகள்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கலாம் என்பது விதிமுறை.
மேற்கூறிய கல்விக் கடன் திட்டம் மத்திய அரசு மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் பேரில் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால், உலகிலேயே அதிக அளவில் குறைந்த சதவீத வட்டியில், கல்விக் கடன் வழங்கும் நாடு இந்தியாவே என்று கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இந்திய வங்கிகள் சங்கத்தின் முடிவின்படி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் போன்ற குறுகிய கால தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு கல்விக் கடன் ரூ.20,000 முதல் ஒன்றரை லட்சம் வரை படிப்பின் கால அளவுக்கு ஏற்ப கிடைக்கிறது.
அதாவது, 3 மாதம் தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.20,000, 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான தொழிற்கல்விக்கு ரூ.50,000, 6 மாதம் முதல் ஒரு வருடத்துக்கு அதிகமான தொழிற்கல்விக்கு ரூ.ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை கடன் கிடைக்கிறது. பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. கல்விக் கடன் திட்டத்தில் கொலட்டரல் செக்யூரிட்டி என்கிற சொத்து பிணை வைத்தல் ஏதும் கிடையாது.
கல்விக் கடன் திட்டத்தை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மாணவர்கள் நன்கு படித்து, தேர்ச்சி பெற்று, வேலையில் சேர்ந்து, பொருள் ஈட்டி, கடனைத் தாமதம் இல்லாமல் திரும்பச் செலுத்துவது அவசியத்திலும் அவசியம்.
கல்விக் கடன் "வாராக் கடன் ஆகாமல் பார்த்துக் கொள்வது மாணவர்களின் கடமை. அதேநேரம், கல்விக் கடன் சமுதாயத்தை மேம்படுத்துவது என்பதால், கல்விக் கடன் விண்ணப்பங்களை பரிவுடன் வங்கி அதிகாரிகளும் பரிசீலிக்க வேண்டும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும்!
மொத்தத்தில், கல்விக் கடன் மூலம் மனித ஆற்றல் மேம்பாடு அடைந்து, வீடும், நாடும் பொருளாதாரரீதியில் முன்னேற வேண்டும் என்பதே அனைவரது ஆவல்.
எஸ். கோபாலகிருஷ்ணன்
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).