கூகுள் ஸ்ட்ரீட் வியூ பெற இருக்கும் முதல் இந்திய நகரம் ஐதராபாத்
இந்தியாவில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ பெற இருக்கும் முதல் நகரம் ஐதராபாத் என்று தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ் தெரிவித்துள்ளார். கூகுள் ஸ்ட்ரீட் வியூ அணியைச் சேர்ந்த மாணிக் குப்தா, தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் நாராயண துமலா ஆகியோர் அமைச்சர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவை சந்தித்துப் பேசினர்.
கூகுள் ஸ்ட்ரீட் வியூ விரிவாக அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பலர் பயன்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில், அதன் பயன்பாடுகள் இதுவரை கட்டுப்படுத்தி வைக்கப்பட்டன. கூகுள் மற்றும் இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி இணைந்து தாஜ் மஹால் மற்றும் குதுப் மினார் போன்ற சுற்றுலாத் தலங்களில் சில ஸ்ட்ரீட் வியூ தொடங்கப்பட்டது. ஆனால் இந்திய நகரங்களில் தெருவில் இருப்பதைப் போன்ற காட்சிகளை வழங்க முடியவில்லை.
கூகுள் ஒரு நகரம் முழுவதையும் ஸ்ட்ரீட் வியூவில் காட்ட அனுமதி பெறுவதற்காக அமைச்சரை சந்தித்துப் பேசி அனுமதி பெற்றதாக தெரிகிறது. இது குறித்து அமைச்சர் ராவ் கூறுகையில், கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் ஒரு முழுமையான நகரம் தெரிவதற்குஒப்புக்கொண்ட முதல் மாநிலம் தெலுங்கானா என்று கூறினார்.