இரத்த சோதனையிலேயே கருவகப் புற்றுநோயை கண்டறியலாம்
கருவகப் புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான புதிய சோதனை முறை ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ovarian cancer என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருவகப் புற்றுநோய் கண்டறியும் சாத்தியங்கள் மேம்படும் என்று இந்த சோதனை முறையை பரிந்துரை செய்திருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
நாற்பத்தி ஆறாயிரம் பெண்களிடம் பதினான்கு ஆண்டுகள் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, கருவகப் புற்றுநோயை கண்டறியும் தற்போதைய பரிசோதனையைவிட, ரத்தப்பரிசோதனை மூலம் இரண்டுமடங்கு துல்லியமாக கருவகப் புற்றுநோயை கண்டறியமுடியும் என்று தெரியவந்திருக்கிறது.
அதேசமயம் கருவகப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் உயிரை பாதுகாக்கும் அளவுக்கு இந்த நோயின் துவக்கத்திலேயே இரத்த பரிசோதனைகள் மூலம் துல்லியமாகக் கண்டறிய முடியுமா என்பது குறித்து மேலதிக சோதனைகள் நடத்தப்படவேண்டியது அவசியம் என்றும் இந்த பரிசோதனைகளை மேற்கொண்ட லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கருவகப்புற்றுநோய் காரணமாக ஆண்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பெண்கள் உயிரிழப்பதாக மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.