10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்துக்குள் புத்தக வினியோகம்: தமிழக அரசு ஏற்பாடு
தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு இலவசமாக பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் கல்வியாண்டிற்கான பாடபுத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணி நிறுவனம் சார்பில் அச்சிடப்படுகிறது.
வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் தொடங்கும் ஜூன் மாதம் முதல் வாரம்தான் மாணவர்களுக்கு அரசு புத்தகங்கள் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்திலேயே புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்–2 வகுப்பு மாணவர்ளுக்கான 85 சதவீத புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இவை தற்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
விரைவில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. தேர்வுகள் முடிவு தெரிந்ததும் இவை மாணவ–மாணவிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.
இதுபோல் 10–ம் வகுப்பு புத்தகங்களும் மே மாதத்திலேயே விநியோகம் செய்யும் வகையில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. இது போல் தனியார் பள்ளி மாணவ–மாணவிகளுக்கான புத்தகங்கள் வட்டார விற்பனை மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன