உடலுக்கேற்ற உடற்பயிற்சி எது?
ஒவ்வொரு உடலும் ஒரு தனிரகம். எனவே ஒருவரின் உடலுக்கேற்ற உடற்பயிற்சியை செய்வதே உரிய பலன் தரும். அப்படியானால் உங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சி எது? தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
உங்கள் உடல்வாகு என்பது நினைத்தமாத்திரத்தில் எடைகூடிவிடும் ரகமா? அல்லது எவ்வளவு சாப்பிட்டாலும், உடற்பயிற்சி எதுவும் செய்யாவிட்டால்கூட உங்களுக்கு உடல் எடையே கூடாத ரகமா?
ஒவ்வொரு மனித உடலும் தனித்தனித் தன்மை கொண்டது. அதாவது ஒவ்வொருவரின் கைரேகையும் ஒரு விதம் என்பதைப்போல தனித்துவமானது.
ஆனாலும் மனித உடல்வாகை எலும்புகளின் அளவு, சதைகளின் தன்மை மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றை கணக்கில் எடுத்து பொதுவான மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்க முடியும்.
அந்த அடிப்படையில் பார்க்கும்போது உங்கள் உடலுக்கு உகந்த உடற்பயிற்சி எது என்பது, உங்கள் உடல் குறித்த உங்களின் புரிதலைப் பொறுத்தது.
“இதில் பிரச்சனை என்னவென்றால் ஒருவருக்கு என்னவிதமான உடற்பயிற்சி தேவை என்று விவாதிக்கும்போது இரண்டு காரணிகள் ஒன்றுக்கொன்று நேர் எதிரில் நின்று முரண்படுகின்றன”, என்கிறார் ஸ்பெய்னில் இருக்கும் அல்டோ ரெண்டிமிய்ண்டோ விளையாட்டு விஞ்ஞான மையத்தின் பேராசிரியர் ஜூவான் பிரான்ஸிஸ்கோ மார்க்கோ.
உடற்பயிற்சி மூலம் நீங்கள் உங்கள் உடல் வனப்பை அழகுப்படுத்த விரும்புகிறீர்களா அல்லது விளையாட்டுத்திறமையை மேம்படுத்தப் பார்க்கிறீர்களா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார் அவர்.
ஒருவரின் மரபணுக்காரணிகள் மற்றும் உடலின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மனித உடலை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார்கள் உடலியலாளர்கள்.
எக்டோமார்ப்
“இந்த ரக மனிதர் உயரமானவர், ஒல்லியானவர், முன்னோக்கி சாயும் தன்மை கொண்டவர். நீண்ட கால்களும், சதைப்பற்றில்லாத மார்புப்பகுதியும் கொண்டவர். இவர்களின் உடம்பில் பெரும்பாலும் சதை போடாது. என்கிறார் பேராசிரியர் மார்கோ.
இப்படிப்பட்ட எக்டோமார்ப் உடல்வாகு கொண்டவர்களுக்கு நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நிற்கும் உடல் திறன் தேவைப்படும் தடகளப்போட்டிகள் பொருத்தமான விளையாட்டுக்களாக இருக்கும். நீச்சல், சைக்கிள் போட்டிகள் போன்றவை.
இப்படிப்பட்ட உடல்வாகு கொண்டவர்களுக்கேற்ற உடற்பயிற்சியின் முக்கிய நோக்கம் உடல் வலிமையை மேம்படுத்துவதாகவும், உடல் எடையை அதிகப்படுத்தி உடற்சதையை கூட்டுவதாகவும் இருக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் மார்கோ.
“இப்படிப்பட்டவர்கள் தங்களின் உடல் மூட்டுக்களை அதிகம் அசைக்கும் விதமான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும். அதன் மூலம் அவர்களின் உடலின் பெருஞ்சதைப் பகுதிகளும், சிறு சதைக் குழுமங்களும் கூடுதலாக செயற்பட்டு வலுப்பெறும்” என்கிறார் அவர்.
இப்படிப்பட்டவர்கள் அதிகபட்சமாக மூச்சுப்பயிற்சி தேவைப்படும் ஏரோபிக் உடற்பயிற்சிகளை குறைவான அளவில் செய்வது நல்லது என்கிறார் அவர். காரணம் இப்படிப்பட்டவர்கள் ஏரோபிக் உடற்பயிற்சிகள் அதிகம் செய்தால் அவர்களின் உடல் எடை குறைவதோடு, உடல் சதை கூடுவதும் நின்றுவிடும் என்கிறார் அவர்.
எண்டோமார்ப்
இந்த ரக உடல்வாகு என்பது எக்டோமார்ப் உடல் வாகுக்கு நேர் எதிரான உடல்வாகு. இவர்களின் உயரம் குறைவாகவும், உடலின் மத்தியப்பகுதியில் அதிக சதைப்பிடிப்புடனும் இருப்பார்கள். இந்த ரக உடலின் உணவு செரிபடும் உள்ளியக்கம் மெதுவாக நடப்பதால், உண்ணும் உணவின் கொழுப்புச் சத்து உடலில் செரிபடாமல் எளிதாக கொழுப்பாகவே தங்கிவிடும். இப்படிப்பட்டவர்கள் மிக எளிதில் எடைகூடி, உடல்பருமனாகிவிடுவார்கள்.
இப்படிப்பட்ட உடல்வாகு கொண்டவர்கள் உடல் வலிமை மட்டுமே தேவைப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியும். காரணம் இவர்களின் உடலின் கூடுதலான சதைப்பிடிப்புத் தன்மை இத்தகைய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயற்பட உதவும்.
இப்படிப்பட்ட உடல்வாகுடையவர்களுக்கு மூச்சுக்குழல் கட்டமைப்பை வலுவாக்கும் வகையான உடற்பயிற்சிகளே நன்மை பயக்கும்.
“இப்படிப்பட்டவகள் முதலில் சாதாரண ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்துவிட்டு பிறகு அனேரோபிக் உடற்பயிற்சிகள் எனப்படும் அதிதீவிர உடற்பயிற்சிகளை வேகமாக செய்யவேண்டும். இதன் மூலம் இவர்களின் மூட்டுக்கள் வேகமாக செயற்படும். எக்டோமார்ப் உடல்வாகுடையவர்கள் எளிமையான உடற்பயிற்சிகளை, கூடுதல் இடைவெளிவிட்டு செய்யவேண்டும். ஆனால் அதற்கு நேர் மாறாக, எண்டோமார்ப் உடல்வாகுடையவர்கள் கூடுதல் வேகத்துடன், கடினமான உடற்பயிற்சிகளை செய்வதே நல்லது, என்கிறார் பேராசிரியர் மார்கோ.
இப்படிப்பட்ட உடல்வாகுடையாவர்களுக்கு பொருத்தமான விளையாட்டுக்கள் என்று பார்த்தால், உடலின் வலிமை, சக்தி, சமநிலை ஆகியவை அதிகம் தேவைப்படக்கூடிய பளுதூக்கும் போட்டிகள், மல்யுத்தம் போன்றவை இவர்களுக்கு ஏற்ற விளையாட்டுப் போட்டிகள் என்கிறார் பேராசிரியர் மார்கோ.
அதேசமயம், இந்த ரக உடல்வாகுடையவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது சிலவற்றை கவனத்தில் கொள்வது நல்லது.
“உடற்பயிற்சியின் மூலம் நாம் செய்யவிரும்புவது என்னவென்றால், ஒரு பக்கம் படிப்படியாக உடலின் சதைப்பிடிப்பை வலிமைப்படுத்துவது. மறுபக்கம் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பின் அளவைக்குறைப்பது. இதை நாம் முறையான விகிதத்தில், சரியான முறையில் செய்யவில்லை என்றால், மோசமான குண்டான உடல்வாகுடனானவர்களை உருவாக்கிவிடும் ஆபத்திருக்கிறது” என்கிறார் பேராசிரியர் மார்கோ.
உளவியல் அடிப்படையில் பார்த்தால் இந்த உடல்வாகுடையவர்கள் மிகவும் பலவீனமானவர்கள். இவர்களை தாமாகவே முன்வந்து தம்மை மேம்படுத்திக்கொள்ள மாட்டார்கள். தோல்வியை கண்டு எளிதில் துவண்டுவிடுவார்கள். அல்லது தமது செயல்களுக்கு உரிய பலன்கள் உடனடியாக கிடைக்காவிட்டாலும் இவர்கள் எளிதில் சோர்ந்துவிடுவார்கள் என்கிறார் உடற்பயிற்சி நிபுணர்.
மெசோமார்ப்
உடல்வாகு அடிப்படையில் பார்த்தால் இவர்கள் தாம் மிகவும் சாதகமான அம்சங்களைக்கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் எந்த பெரிய முயற்சியும் செய்யாமலே தடகள விளையாட்டு வீரருக்கு உண்டான உடல்வாகுடன் தோன்றுவார்கள்.
“மெசோமார்ப் உடல்வாகுடையவர்கள் இயற்கையிலேயே விளையாட்டு வீரர்கள். இவர்கள் எதைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்வார்கள்", என்கிறார் மார்கோ.
கால்பந்து விளையாட்டு வீரர்கள் நினைத்த மாத்திரத்தில் திடீரென பேட்ல் எனப்படும் உள்ளரங்கு டென்னிஸ் விளையாட்டை ஆடத்துவங்குவார்கள். அதையும் சிறப்பாக ஆடுவார்கள். அவர்களால் கூடைப்பந்து விளையாட்டைக்கூட சிறப்பாக ஆட முடியும். நீடித்து தாக்குப்பிடிக்கும் விளையாட்டுக்களானாலும் சரி, வேகமாக ஓடும் ஓட்டப்பந்தயமானாலும் சரி அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்கிறார் மார்கோ.
இப்படிப்பட்ட உடல்வாகுடையவர்களுக்கு சரியான உடற்பயிற்சி என்பது உடல் வலிமையையும், சக்தியையும் அதிகப்படுத்துவனவாக இருக்க வேண்டும். மேலும் சதைகளை வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகளும், மூச்சுப்பயிற்சியை மேம்படுத்தும் உடற்பயிற்சிகளும் சம விகிதத்தில் இவர்கள் மாறி மாறிச் செய்யவேண்டும்.
டென்னிஸ், கால்பந்து, படகுப்போட்டிகள் மற்றும் டிரயத்லான் போன்றவை இத்தகைய உடல்வாகுடையவர்களுக்கு மிகவும் பொருத்தமான விளையாட்டுக்கள்.
உடற்பயிற்சியில் உங்கள் தேவை என்ன?
மேசோமார்ப் உடல்வாகுடையாவர்கள் இவ்வளவு சாதகமான அம்சங்களை கொண்டிருந்தாலும், இவர்கள் தங்களின் உணவில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார் மார்கோ. காரணம் இவர்கள் உணவில் உரிய கவனம் செலுத்தாவிட்டால், இவர்களின் உடல் கொழுப்பு கூடிவிடும்.
எண்டோமார்ப் உடல்வாகுடையவர்களைப் போல இவர்கள் விரைவாக உடல்கொழுப்பை சேமித்துக் கொள்ளமாட்டார்கள் என்றாலும், இவர்கள் உணவில் கவனம் செலுத்தாவிட்டால் உடல் கொழுப்பு சேர்ந்துவிடும் என்கிறார் அவர். அதேசமயம், எக்டோமார்ப் உடல்வாகுடையவர்களைப் போல இவர்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டு, எளிதில் செரித்துவிடக்கூடியவர்களும் அல்ல.
எனவே உங்களின் உடல்வாகு என்னவகையானது என்பதை முதலில் புரிந்துகொள்வது அவசியம். அதேசமயம், ஒரு வகையான உடல்வாகுடையவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் உடற்பயிற்சிகளை மற்றவர்கள் செய்யக்கூடாது என்றும் இல்லை. எந்த உடற்பயிற்சிகளை, எந்த அளவுக்கு, என்னமாதிரியான இடைவெளியில் செய்யவேண்டும் என்பதே முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி.
இதில் முக்கியமான விஷயம் உங்களின் நோக்கம் என்ன என்பதில் உங்களுக்கு தெளிவு இருப்பது அவசியம். உங்கள் நோக்கம் உடல் வனப்பை அதிகரிப்பதா? அல்லது விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதா? உங்கள் தேவை என்ன என்பதை நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், அதற்கேற்ற உடற்பயிற்சியையும், உணவுப்பழக்கத்தையும் உருவாக்க முடியும் என்பதே உடற்பயிற்சி நிபுணர்கள் சொல்லும் அறிவுரை.