தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சலுக்கான "டாமி புளு மாத்திரை இலவசமாக வழங்கப்படுவதால், இந்தக் காய்ச்சலைக் கண்டு யாரும் அச்சம் அடைய வேண்டாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
பன்றிக் காய்ச்சல் நோயால் ஒருவர்கூட இறந்துவிடக் கூடாது என்பதற்காக முழுக்கவனம் செலுத்தி தமிழகம் முழுவதும் அதற்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சல் அல்லது டெங்குக் காய்ச்சல் வந்தால், உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பன்றிக் காய்ச்சல் ஏ,பி,சி என 3 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.இதில் ஏ, பி பிரிவு நோயாளிகள் அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் போதுமானது. சி பிரிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலியுடன் மூச்சுத்திணறல் ஏற்படும். அவர்கள், அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும். முறையாக சிகிச்சை பெற்றால் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படாது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சலுக்கான "டாமி புளு மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, இந்த காய்ச்சலைக் கண்டு யாரும் அச்சம் அடைய வேண்டாம். அதேபோல, டெங்கு காய்ச்சலுக்கும் சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் யாராவது தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தால், அந்த மருத்துவமனையிலிருந்து உடனே அரசு மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்கும் அரசு இலவசமாக "டாமி புளு மாத்திரைகளை வழங்க தயாராக உள்ளது என்றார் கீதாலட்சுமி.