மருத்துவக் கல்வி எளிதில் அருளும் தன்வந்த்ரி பகவான்
சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - தாடிக்கொம்பு‘‘மகரிசியா மண்டூகஞ் சாபமெரித்தான்அழகனோ யிவனென தேவரிறைஞ்சசவுந்திரப் பெருமான் அருளயென்ன குறை யெமக்கே”
- என்றார் கோலப் பெருஞ்சித்தர். மண்டூகம் என்றால் தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக உருப்பெற்றார். இதனால் அவருக்கு ‘‘மண்டூக மகரிஷி’’ என பெயர் உண்டாயிற்று. தன் சாப நிவர்த்திக்காக, மகரிஷி இத் திருத்தலத்தில் தபசு செய்தார். அப்போது அசுரன் ஒருவன் அவரை தொந்தரவு செய்யவே, அவனிடமிருந்து தன்னைக் காக்க வேண்டுமென்று மதுரையில் அருள்பாலிக்கும் கள்ளழகப் பெருமானை வேண்டினார். அவருக்கு அருளிய கள்ளழகர் அசுரனை அழித்தார். பிறகு மகரிஷியின் வேண்டுதலை ஏற்று பெருமாள் இத்திருத்தலத்தில் எழுந்தருளினார். ‘‘சவுந்தரராஜப் பெருமாள்’’ என்ற திருநாமமேந்தி பக்தர் களுக்கு அருள்பாலிக்கின்றார். மதுரை அழகர் கோயிலுக்கு இணையான சிறப்பை உடையது இத்திருக்கோயில்.
‘‘கள்ளழகரே உருவொத்து நாமமே
திரித்து மண்டூகத் தபசா தலமிருந்து
வறுமை வாட்டம் பிணி யேதாயி
னுமறுத்தின்ப மூட்ட கலியுகத்து யிதனினுமிக்க
தோர் பூமியுண்டோ”
- என்றார் பதஞ்சலி யோகியார். மூலஸ்தானத்தில் சவுந்திரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி-பூமி தேவியருடன் காட்சி தருகின்றார். கள்ளழகப் பெருமாளே சவுந்திரராஜப் பெருமாளாக அழகு மிகுத்து மண்டூக மகரிஷி சாபமறுத்து நிற்கின்றார். எப்படிப்பட்ட வறுமையும் வாட்டமும் சோர்வும், பிணி பீடையும் இவரைச் சரணடைய அகலும் என்றார் சித்தர்.
‘‘ஓண தீபத்தொடு பெருமானை
தரிசித் தாராதனை யாற்றுவாருக்கு
பாவ விமோசனமுண்டு திண்ணமே”
- என்றார் ராம தேவனார். ஒவ்வொரு திருவோணம் நட்சத்திரத்தன்றும் சுவாமி பாதத்தில் திருவோண தீபம் ஏற்றப்பட்டு விசேஷ பூஜை நடைபெற்றபிறகு தீபம் முன்னே செல்ல, உற்சவமூர்த்தி பின்னே வலம் வருவார். இந்த தரிசனத்தை பன்னிரண்டு திருவோண நாட்களில் காண, பாவ விமோசனம் பெறுவர் என்பதாம்.
‘‘யீராறு வோணத் தீபதரிசனம்
பெற்றோர் பாவ விமோசனமொடு
பெருந்தனம் பெறுவரே”
- என்றார் பதஞ்சலியார். பாம்பாட்டிச் சித்தர்,
‘‘சுவர்ணவாகர்ஷண பயிரவனை
கடக முழுமதி தொட்டு மிதுனமுழுமதி
யீராய் தொழுவாருக்கு தனப்பீடை
யோடுமென்போமே”
- என்றார். சொர்ண ஆகர்ஷண பைரவ சுவாமியை ஆடி மாதம் பவுர்ணமி தொட்டு ஆனி மாதம் பவுர்ணமி வரை தொழுது எழ, அவர் தம் வாழ்வில் பொருளாதார சிக்கல் விலகி, தன சம்பத்து உண்டாகும் என்பதாம்.
‘‘சிற்றம்பல நாயகியாங் கல்யாண சவுந்திர
நாயகியை தொழுவார் தம் உடற்
கூறு சீராகியே மனநலமொடு தன
நலமுமேம்பாடு காணுமே”
- என்றார் பொய்யாமொழிச் சித்தர். இத்திருக்கோயிலை சிற்பக்கோயில் என்றே சித்தர் பெருமக்கள் போற்றுகின்றனர். பிரமாண்டமான கலை வண்ணங்களுடன் கோயில் இன்றும் விளங்குகின்றது. தாயார் கல்யாண சவுந்திரவல்லி. இவரைத் தொழுது வர பித்தம், மனநோய் போன்ற கோளாறுகள் அகலும். உடலில் ஏற்படும் எந்த கொடிய நோயும் அகன்று சுகத்தைத் தரும். கூடவே சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பதாம்.
‘‘சங்க பதும நிதி போற்ற வாணிபந் தழைக்குமே”
- என்றார் உரோம மகரிஷி. சந்நதி முகப்பில் சங்கநிதி மற்றும் பதும நிதி எனும் குபேரபுரி காவலர்களைத் தொழுபவருக்கு வியாபாரம் செழித்து தனப்ராப்தி சேரும் என்பதாம். இத்திருக்கோயிலில் நின்ற நிலையில் விநாயகர் சந்நதி கொண்டுள்ளார்.
‘‘நின்ற கணநாதனை புல்லாலருச்சிக்க
ரணமாறுமன்றி வம்ச விருத்தியுண்டாமே”
- என்றார் அகப்பேய்ச்சித்தர். இவரை அறுகம்புல்லால் தொடர்ந்து அர்ச்சித்து வர ஆறாத புண்ணும் குணமாகும். படை, சொறி போன்ற நோய்கள் விலகும். குடும்பம் விருத்தி பெறும் என்பதாம்.
‘‘வைத்த வைப்பாறுமே விட்ணு துர்க்காம்பிகையை ராக்காலந் தொழவே”
- என்றார் கோரக்கர். எதிரிகள் இட்ட பில்லி சூன்யம் போன்ற தொல்லைகள் இத்திருக்கோயில் வாழ் விஷ்ணு துர்க்கையை ராகு காலத்தில் தொழ விலகும் என்றார் சித்தர். ராமபிரானை தோளில் சுமந்திருக்கும் ஆஞ்சநேயரைத் தொழுது வர வெளிநாட்டுப் பயணம் உண்டாகும். வாராக் கடன் வசூலாகும். இழந்த செல்வம் மீண்டும் கிட்டும் என்றார் அகத்தியர்.
‘‘சீதை மணாளனை தந்
தோளிலே தாங்கு மநுமனை
ஆராதிப்பாருக்குக் கல்லலிலையே
கடல் தாண்டி வாணிபம் சேர
வாராக் கடனும் வந்தண்டியின்பமூட்ட
யிழந்த சம்பத்தொடு தனமுஞ் சேர
சத்தியமே”
- என்றார்.
‘‘மதி மறை நாளதனிலே மருத்து
வனாந் தந்வந்த்ரியை மூலியிட்டு
பூசிக்க மருத்துவனாக யோகஞ்
சேருமல்லற் பீடைபடுமே”
- என்றார் கமலமுனி. அமாவாசை திதிகளில் மூலிகை தைலாபிஷேகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்த்ரி பெருமானுக்கு பூசை நடைபெறச் செல்வோர் தமக்கு எப்படிப்பட்ட பிணியும் குணமாகிறது. அதோடு நில்லாமல் மருத்துவக் கல்வியும் எளிதில் கிடைக்கும் என்பதினால் மருத்துவக் கல்வி வேண்டி முயல்பவர்கள் தொழ வேண்டிய முக்கிய தலமிது என்கின்றார் சித்தர்.
“சக்கரஞ் சுற்றி தேவர்கள்
காயத்ரி சுழ மந்தனார்
பீடை யோடும் முடக்கு
வாதமகலும் பித்தந் தேறுமென
வறிவீரே”
- என்றார் கமல முனிச் சித்தர். இங்குள்ள சக்கரத்தாழ்வார் தமைச் சுற்றி காயத்ரி தேவர்கள் உறைகின்றனர். இச்சக்கரத்தாழ்வாரை சரணடைந்த பேருக்கு முடக்குவாதம் எனும் கொடிய பீடை அகலும். சனி பகவானால் எழும் தோஷம் முற்றிலும் தீரும் என்பதாம். இவருக்குப் பின்புறம் உள்ள நரசிம்ம சுவாமியைச் சுற்றிலும் அஷ்டலக்ஷ்மிகள் எழுந்தருளியுள்ளனர். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தீபமேற்றித் தொழுவோர்க்கு திருமகள் கடாட்சம் சேரும். வீடு, வாகனம் போன்ற ஆடம்பரப் பொருட்கள் சேரும் என்றார் காகபுஜண்டர்:
‘‘அஷ்டலட்சுமி கூடியாராதிக்குந்
நரசிம்மனைத் தொழ மந்தமுன்
னாளாயினு ரத கஜ துரக பதாதி
யோகஞ் சேரு மெய்யே”.
இத்திருத்தலம் திண்டுக்கல்லிலிருந்து வேடசந்தூர் செல்லும் பாதையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆலயத் தொடர்பிற்கு: 0451-255 7232.
நன்றி தினகரன்