இந்தியாவின் வளர்ச்சிக்கு கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டும்: அப்துல்கலாம் யோசனை
ராமநாதபுரத்தில் உள்ள செய்யது அம்மாள் மேல் நிலைப்பள்ளி 1965–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நேற்று பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. செய்யது அம்பாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா வரவேற்று பேசினார். அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் செய்யது அப்துல்லா, செயலாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, உறுப்பினர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டு பொன்விழா கல்வெட்டை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
மேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மேல் நிலைக்கல்வியில் பல்வேறு பாடத்திட்டங்களை புகுத்தி தேவையற்ற பாடப்பிரிவுகளை அகற்றி தனித்திறன் வளர்க்கும் வகையிலான பாடத்திட்டங்களை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் வழி செய்தால் பள்ளிக்கல்வி சிறக்கும். தரமான அனுபவக் கல்வி இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்.
தற்போதுள்ள பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைத்து அதை தொழிற்திறன் பண்பாடு, உலகத்திறன், அறிவுத்திறன், மேம்பாட்டு பயிற்சி அளித்து உலகத்தரம் வாய்ந்த தொழிற்திறன் சான்றிதழ் வழங்க வேண்டும். அவர்களை தொழில் முனைவோராக அனுப்ப வேண்டும். தொழில் திறன்மிக்க இந்தியா உருவாக கல்வித்திட்டத்தில் மாற்றம் அவசியம். எண்ணம் உயர்வாக இருந்தால் எழுச்சி பெறும். லட்சியத்தை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறுவோம். அறிவை தேடித்தேடி பெற வேண்டும். கனவு தான் தன்னம்பிக்கை என்பதால் உங்கள் லட்சியம் வெற்றி பெற கனவு காணுங்கள். கனவு என்பது இளைஞர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. அப்படிப்பட்ட கனவு தான் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அளித்து முன்னேற்றத்தை கொடுக்கும்.
கனவு என்பது இளைஞர்களின் வாழ்க்கையில் முக்கியமானது. வாழ்க்கையில் தன்னம்பிக்கை கொடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.