கல்வி கட்டணம் விவகாரம்: அரசு நியமித்த கமிட்டியை தனியார் பாலிடெக்னிக் அணுக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
கட்டண விவகாரம் தொடர்பாக, அரசு நியமித்துள்ள கல்வி கட்டணம் நிர்ணய குழுவை அணுகும்படி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கல்வி கட்டணம்
தமிழ்நாடு அரசு உதவி பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் நிர்வாகிகள் சங்கம் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டு இருந்ததாவது:–
2002–ம் ஆண்டு தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு ரூ.6,500 என்றும், நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு ரூ.21 ஆயிரத்து 700 எனவும் நிர்ணயம் செய்தது. இதன்பின்னர், 2003–ம் ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் என்றும், நிர்வாக இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்தது.
பழைய கட்டணம்
இந்த நிலையில், கடந்த 2012–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11–ம் தேதி எஸ்.சி. மற்றும் எஸ்.டி. நலத்துறை ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது. அந்த கட்டணத்தை அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், 2002–ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட பழைய கட்டண தொகையையே அரசு வழங்கி வருகிறது. இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
கமிட்டியை அணுக வேண்டும்
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சஞ்சய்காந்தி, பாலிடெக்னிக் கல்லூரி கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் கமிட்டியை தமிழக அரசு அமைத்துள்ளது. அந்த கமிட்டி நிர்ணயம் செய்யும் கட்டணத்தை தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வழங்க எஸ்.சி. மற்றும் எஸ்.டி. நலத்துறை தயாராக உள்ளது என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் சங்கத்தை, கட்டண நிர்ணய கமிட்டியை அணுகும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.