சிறு வயதில் இருந்தே கற்க வேண்டிய யோகா
இன்றைய நவீன உலகம் போற்றும் யோகா, அறிவியல்பூர்வமாக போற்றப்படுகிறது. யோகா எனும் சமஸ்கிருத சொல் ’யுஜ’ எனும் சொல்லில் இருந்து வந்தது. ’யோக்’ என்றால் இணைத்தல் சேர்த்தல், ஒன்றுபடுத்துதல் என்று பொருள். அதாவது உடல், மனது, புத்தி ஆகிய மூன்றையும் ஆரோக்கியமாக, வளமாக, தெளிவாக வைத்து, இணைத்து அதன்மூலம் ஆன்மாவின் உண்மை நிலையை அறியச் செய்வது என்பது இதன்பொருள்.
யோகாவின் வரலாறு
5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் ஆற்றல், தியாகம் அளப்பரியது. எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இவர்கள் ஆய்வு செய்ததின் பலனாக, இக்கலை இன்று நம்மிடையே உறுதியாக உள்ளது.
செடி, கொடி, மரங்கள், பூக்கள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ் உயிரினங்கள், மாடுகள் மற்றும் இயற்கையின் ஒவ்வொரு உருவாக்கத்தினையும் பார்த்து, அதைப்போலவே பயிற்சி பெற்று அவற்றின் அறிவியல்பூர்வ ஆன்மிக பலன்களை நம்மிடையே கொடுத்துள்ளனர்.
பதஞ்சலியின் பங்களிப்பு
கி.மு. 4ம் நூற்றாண்டில் தோன்றிய பதஞ்சலி முனிவர் தன் ’யோக சூத்திரம்’ எனும் அற்புத நூலில் யோகக்கலைக்கு விளக்கம் அளித்துள்ளார். இவர் ’அஷ்டாங்க யோகம்’ என்று 8 பிரிவுகளாக, 196 சூத்திரங்களில் யோகத்தினை அடக்கி உள்ளார். அவை இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி.
இவற்றுள் மூன்றாம் படியான ’ஆசனம்’ என்பதுதான் இன்று மேலை நாடுகளில் யோகா எனும் பல்வேறு நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உடற்கலை எனும் ஆசனக்கலை தான் யோகா எனும் பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். 19-21ம் நூற்றாண்டில் உலகின் பல அற்புத யோக ஆசிரியர்கள் தோன்றியுள்ளனர். அவர்களில் சுவாமி குவளையானந்தா முதன்மையானவர்.
ரிஷிகேஷ், சுவாமி சிவானந்தர், பீகார் யோகப் பள்ளியின் நிறுவனரும் சுவாமி சிவானந்தரின் சீடருமான சுவாமி சத்யானந்தர், பி.கே.எஸ்.அய்யங்கார், ஏ.ஜி. தேசிகாச்சாரி, பெங்களூரு டாக்டர் நாகேந்திரா குறிப்பிடத்தக்கவர்கள்.
பலன்கள்
முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். நோய் வராமல் தடுக்க இயலும். வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். நேரடியாக தகுதிபெற்ற யோகா நிபுணரின் கீழ்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ’டிவி’ பார்த்து செய்தால் பக்கவிளைவுகள் வர வாய்ப்பு உள்ளது. முறையாக செய்வதன் மூலம் பல அற்புத பலன்களை பெற இயலும்.
யோகப் பயிற்சியின் மூலம் உடற்தகுதியினை உடல் நலத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப்போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.
இளவயதிலேயே முறையாக பயிற்சி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம், கல்லீரல் நோய்களை வராமல் தவிர்க்கலாம். ரத்தஓட்டத்தை சீராக வைக்க உதவும். எலும்புகள், தசை நார்களை வலிமையாக, உறுதியாக வைக்க உதவும். முன்னால் குனியும் ஆசனங்கள் மூலம் மூளைக்கு முறையாக ரத்தஓட்டத்ததை செலுத்தி, பிராணவாயு அதிகமாக உட்செலுத்தி நீண்ட ஆயுளையும், ஞாபக சக்தியையும் பெருக்க முடியும்.
உளவியல் ரீதியாக மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு வளர்க்க முடியும். கவனச் சிதறலில் இருந்து விடுபட்டு, மனஒருமைப்பாட்டை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
வேதியியல் பலன்கள்
’எச்டிஎல்’ எனும் கெட்ட கொழுப்பை கரைக்க முடியும். ஹீமோகுளோபின் எனும் சிகப்பு அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும். தைராய்டு சுரப்பிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். புரதச்சத்து, வைட்டமின் ’சி’ போன்றவற்றை கூட்ட முடியும்.
தூக்கமின்மையை நீக்கி நன்கு உறங்க முடியும். செரிமான சக்தியை கூட்டி மலச்சிக்கலை விலக்கும். நீண்ட மகிழ்ச்சியான ஆற்றலை கொடுக்கும். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட இயலும். தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை மேம்படுத்தும். பெண்களுக்கே உரிய உடல்ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும். இன்னும் பல பலன்களை யோகாவின் மூலம் நாம் பெற இயலும்.
எச்சரிக்கை
ஆப்பரேஷன் செய்தவர்கள் 6 மாதம் கழித்தே யோகா பயிற்சி செய்ய வேண்டும். உளவியல் ரீதியான பிரச்னை உள்ளவர்கள் ’பை பாஸ்’ இதய ஆப்பரேஷன் செய்தவர்கள் டாக்டர்கள் ஆலோசனைக்கு பின் பயிற்சியில் ஈடுபட வேண்டும். உயர் ரத்தஅழுத்தம் உடையவர்கள், இடுப்பு எலும்பு தேய்மானம் உடையவர்கள், இதய நோயாளிகள் ஆகியோர் முன்னால் குனியும் மற்றும் தலைகீழ் ஆசனங்களை செய்யக்கூடாது.
கழுத்து எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் பின்னால் குனியும் ஆசனங்களை பயிற்சி செய்யக்கூடாது. மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், பாஸ்ட்புட் வகைகளை விட்டுவிட வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யக்கூடாது. தூங்கி எழுந்தபின் வெறும் வயிற்றில் அதிகாலையில் பயிற்சி செய்ய வேண்டும்.
தகுதியற்ற அரைகுறை யோக பயிற்சியாளர்கள் பலர் இன்று தோன்றி உள்ளனர். எனவே ஆசிரியரின் தகுதியறிந்து நல்ல யோக நிபுணரிடம் நேரடியாக பயிற்சி பெற வேண்டும். எனவே நாமும் தினமும் அரைமணிநேரம் தவறாமல் யோகா பயிற்சி செய்வோம். உடல் - மனநலம் பெற்று மகிழ்வுடன் வாழ்வோம்.
- முனைவர் த.ரவிச்சந்திரன்காந்தி சிந்தனை அமைதி ஆக்கத்துறை காந்திகிராம கிராமிய பல்கலை 94430 37339