ஏழு சிறந்த பழக்கங்கள்
ஏழு சிறந்த பழக்கங்கள்
அமெரிக்க சிந்தனையாளர் ஸ்டீபன் கோவே, வாழ்வில் பெருஞ்சாதனைகளைப் புரிந்த சாதனையாளர்களின் வெற்றி வரலாற்றையும், அவர்களது குணாதிசயங்களையும் தீவிரமாக ஆராய்ந்தபோது, அச்சாதனையாளர்களுக்கு பொதுவாக, சில சிறந்த பழக்கங்கள் இருப்பதைக் கண்டு வியந்தார்!
அதையே & The seven habits of highly effective people& by Stephen R.Covey என்ற புத்தகமாக வடிவமைத்தார். அவர் கண்டறிந்த ஏழு பழக்கங்களும், எல்லோர்க்கும் மிக மிக எளிதானவை; புரிந்து கொள்ளக்கூடியவை; எல்லோரும், எல்லா வயதினரும் பின்பற்றக்கூடியவை!
உன் செயலுக்கு, நீயே முழுப்பொறுப்பு எடுத்துக்கொள்: பிறரது எண்ணம், சொல், உணர்ச்சி, செயல் போன்றவற்றால் நீ தூண்டப்பட்டால், உடனடியாக, உணர்ச்சி வசப்பட்டு, எதிர்வினையைக் காட்டி அவதிப்படாதீர். சற்று சிந்தித்து, சுய பொறுப்புடன் செயல்பட்டால், நல்ல விளைவுகள் உண்டாகும்.
இலக்கை மனதில் இருத்தி, பயணத்தைத் தொடங்கு: அடைய வேண்டிய குறிக்கோளை மனதில் பதித்து,’கருமமே கண்ணாயினாராய்’ செயல்பட்டால், பயணம் வெற்றிப் பாதையில், உறுதியாய்ச் செல்லும்.
முதன்மையானவற்றை முந்திச் செய்: செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு, முக்கியமானவற்றை அவசரமின்றி, முனைப்புடன் முதலில் செய்தால், கால நிர்வாகம் கையில் இருக்கும், வெற்றி வீட்டு வாயிலில் நிற்கும்!
நீ மட்டுமின்றி, பிறரும் வெற்றி பெற நினை: உங்களது நலனோடு, பிறர் நலனையும் மனதில் இருத்தி, வெற்றி-தோல்வி மனப்பான்மை அற்ற பரந்த மனத்துடன், பிறருடன் பேச்சுவார்த்தை அல்லது பணியில் ஈடுபடும்போது, மனித உறவுகள் மேம்படவும், வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
முதலில் புரிந்துகொள்; பிறகு புரிந்து கொள்ளப்பட நாட்டம் கொள்: முதலில் பிறர் சொல்வதை கவனமாகக் கேட்டு, பின்பு அவரிடம் உரையாடினால், செய்திப் பரிமாற்றம் நல்ல முறையில் நடந்து, இருவரும் பயன் பெறலாம்; உறவும் மேம்படும்.
ஒருங்கிணைந்த, கூட்டு சக்தியாய் செயல்படு: பலர் இணையும்போது, வெறும் சேர்க்கையாக இன்றி, கூட்டு சக்தியாக, குழுமமாக செயல்பட்டால், பல மடங்கு பயன்களை அடையலாம்.
உன்னை தினமும் புதுப்பித்துக்கொள்: தினமும் உடல், உள்ளம், உணர்வு, ஆன்மிக அடிப்படையில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், நாள் முழுவதும் சோர்வின்றி, உற்சாகத்தோடும், சக்தியோடும் செயலாற்ற முடியும்.