வருத்தத்துக்குரிய முதல் இடம்
தமிழ்நாடு பெருமைக்குரிய பல முதல் இடங்களைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளித்தாலும், வருத்தத்துக்குரிய ஒரு முதல் இடத்தைப் பெற்றிருப்பது காவல் துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறைகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. மத்திய அரசாங்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் போக்குவரத்து ஆராய்ச்சிப்பிரிவு 2013–ம் ஆண்டில் நாடு முழுவதும் நடந்துள்ள விபத்துக்கள் பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவில் உள்ள சாலைகளில் ஒரு நிமிடத்துக்கு ஒரு விபத்துக்கள் நடக்கிறது என்றும், 4 நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்தில் மரணமடைகிறார் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடந்த 4 லட்சத்து 86 ஆயிரத்து 476 விபத்துக்களில், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 572 பேர்கள் உயிர் பலியாகியுள்ளது.
இதில், மிகவும் வேதனைக்குரிய தகவல் என்னவென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக விபத்துக்களும், அதிகம்பேர் காயமடைவதும் நடந்து இருக்கிறது. அந்த ஒரு ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 66 ஆயிரத்து 238 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், 75 ஆயிரத்து 681 பேர்கள் காயம் அடைந்துள்ளனர். சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் அதாவது, உத்தரபிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. 15 ஆயிரத்து 563 பேர்கள் சாலை விபத்துக்களில் மரணம் அடைந்துள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு விபத்துக்களும் நடக்கவில்லை, இவ்வளவு பேர்களும் காயம் அடையவில்லை என்ற புள்ளிவிவரம் மிகுந்த வேதனை அளிப்பது மட்டுமல்லாமல், இந்த அவப்பெயரை போக்குவதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதை உறுதிபட தெரிவித்துவிட்டது. லட்சத்தீவு குட்டித்தீவுதான் என்றாலும், கடந்த ஒரு ஆண்டில் ஒரே ஒரு விபத்துதான் நடந்து இருக்கிறது, ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை, இருவர் மட்டும் காயம் அடைந்துள்ளனர்.
2014–ல் தமிழக அரசின் போக்குவரத்து ஆணையம் எடுத்த ஆய்விலும் இந்த எண்ணிக்கை உயர்ந்திருப்பது கவலையை அதிகரித்து இருக்கிறது. 2014–ல் விபத்துக்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 250 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 725 ஆகவும் உயர்ந்துவிட்ட நிலையில், உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 15 ஆயிரத்து 190 ஆக சற்று குறைந்திருக்கிறது. இந்த விவரங்களைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் சாலைப்பயணம் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதைப் பார்த்து என்னென்ன குறைகள்?, எங்கெங்கு இருக்கிறது? என்பதை உடனடியாக ஆராய்ந்து, தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுவாக ஓவர் ஸ்பீடும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதும்தான் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணம் என்றும், வளைவுகள் அதிகம் உள்ள இடங்களில்தான் அதிக விபத்துக்கள் நடக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதிக விபத்துக்கள் நடக்கும் இடங்களை கறுப்பு இடங்களாக அறிவித்து, கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும். ஐகோர்ட்டு உத்தரவிட்டதுபோல, நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகள் உடனடியாக அகற்றப்படவேண்டும். போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏதாவது விபத்து நடந்தால், உடனடியாக மருத்துவ உதவி அளிப்பது உறுதி செய்யப்பட வேண்டும். மொத்தத்தில், காவல்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை விழிப்போடு செயல்பட்டால், நிச்சயமாக விபத்துக்களும் குறையும், உயிர் இழப்புகளும் குறையும். தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள இந்த அவப்பெயரும் போக்கப்படும்.