பச்சிளம் தாய்மார்களுக்கு உதவ வருகிறது கூகுள் கிளாஸ்
முதலில் கூகுள் கிளாஸ் என்றால் என்னவென்று பார்க்கலாம். நவீன தொழில்நுட்பத்தின் புதிய வரவு இந்த கூகுள் கிளாஸ். இது மனிதர்கள் பயன்படுத்தும் கண் கண்ணாடியைப் போன்று இருக்கும்.
ஆனால், இது வெறும் கண்ணாடி அல்ல. ஒரு நவீன ஸ்மார்ட்போனில் இருக்கும் அத்துனை அம்சங்களும் இந்த கண்ணாடியில் ஒளிந்திருக்கும். அந்த கண்ணாடியைப் போட்டுக் கொண்டிருக்கும் நபர் பார்க்கும், கேட்கும், படிக்கும் அனைத்து விஷயங்களையும் இந்த கண்ணாடி பதிவு செய்து கொள்ளும்.
பதிவு செய்து கொள்வதோடு மட்டும் அல்லாமல், அதனுடன் இணைக்கப்படும் மற்றொரு கருவிக்கும் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அனுப்பும் வசதியும் உள்ளது.
இந்த கூகுள் கண்ணாடி 25 இஞ்ச் கம்ப்பூட்டர் ஸ்கிரீனை ஒத்திருக்கும். இதில் 16 ஜி.பி. சேமிப்பு திறனும், 5 மெகா பிக்சல் கேமராவும், வீடியோ பதிவு வசதியும், வைஃபை, 24 மணி நேரம் தாங்கக் கூடிய பேட்டரி, புளூடூத் தொடர்பு என முக்கிய அம்சங்கள் கொண்ட இந்த கண்ணாடியின் எடை எவ்வளவு தெரியுமாங்க? கேட்டா அதிர்ச்சியில ஆப் ஆயிடுவீங்க.. வெறும் 42 கிராம்தாங்க.
கூகுள் கண்ணாடி பற்றி சொல்லியாகிவிட்டது. அடுத்து இந்த கண்ணாடியை வைத்து ஒரு உணர்வுப்பூர்வமான பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
வாஷிங்டனில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில், படுக்கையில் இருக்கும் தாய் ஒருவர், தனக்குப் பிறந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 101 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் பச்சிளம் குழந்தையை இந்த கூகுள் கிளாஸ் மூலமாக பார்க்கப் போகிறார். இது முதலில் பரிசோதனை முறையில் நடைபெற உள்ளது.
அதாவது, பிரிகாம் மகளிர் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் ஸ்டீபனி ஷைனி தான் அந்த தாய். அவர் வைத்துள்ள வேண்டுகோளை ஏற்று இந்த பரிசோதனை நடக்க உள்ளது.
அதன்படி, ஐசியுவில் பணியாற்றும் செவிலியர் அல்லது வேறு ஒருநபர் கூகுள் கிளாஸ் அணிந்து கொண்டு ஐசியுவுக்குள் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் ஷைனியின் குழந்தையை அவர் பார்ப்பார்.
அவர் கூகுள் கிளாஸ் மூலமாக பார்க்கும் காட்சிகள், அந்த குழந்தையின் தாயாரான ஷைனியின் கையில் இருக்கும் டேப்லட் போனில் தெரியும். இதன் மூலம் ஐசியுவில் இருக்கும் தனது குழந்தையின் உடல் இயக்கத்தை ஷைனி அவ்வப்போது பார்த்து மகிழ்வார். இது குழந்தை தன்னுடனேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
இந்த பரிசோதனை முறை வெற்றிபெற்றால், அது எத்தனையோ தாய்மார்களின் மன அழுத்தத்தைப் போக்கும் என்பது நிச்சயம்.
பல குழந்தைகள் பிறந்ததுமே உடல் நலக் குறைபாடு காரணமாக தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு ஐசியுவில் வைக்கப்படுகிறது. உடல் நலனைப் பொருத்து இது சில நாட்கள் முதல் சில மாதங்களாகக் கூட ஆகலாம். அது வரை, குழந்தையைப் பிரிந்து இருக்கும் தாய்மார்கள் பல்வேறு வகையில் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.
அதுபோன்றவர்களுக்கு இந்த கூகுள் கிளாஸ் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.