அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை மீண்டும் துவக்க அரசு உத்தரவு
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை மீண்டும் துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.ஐந்து வயது குழந்தைகளை நிபந்தனையின்றி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும்; மாணவர்களை உடல், மனதளவில் தொந்தரவு செய்யக் கூடாது.
சமூகத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் குழந்தைகள், பள்ளி சேர்க்கையின்போது, 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட அடிப்படைக் கல்வி உரிமை சட்டம், 2009ல் அமல்படுத்தப்பட்டது.
இச்சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பிரசாரம் செய்ய, தமிழகம் முழுவதும் கலைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள குழுக்கள் குறித்து ஆய்வறிக்கை அனுப்ப, 32 மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர்களால் கண்டறியப்பட்ட, பதிவு பெற்ற கலைக் குழுக்களின் பட்டியல், திட்ட இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. இக்குழுக்களை மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுத்த, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநிலம் முழுவதும், 385 ஊராட்சி ஒன்றியங்களில் பதிவு பெற்ற கலைக்குழுக்களைச் சேர்ந்த 200 பேர், அடிப்படைக் கல்வி, சட்ட விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.