பூமிக்கு அருகில் வந்த சிறுகோளின் நிலவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
திங்கட்கிழமை அன்று (26.01.2014)பூமிக்கு அருகே வந்த சிறுகோளுக்கென தனியானதொரு நிலவு இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
தோராயமாக ஒரு பெரிய சொகுசுக்கப்பல் அளவுக்கு இருக்கும் இந்த சிறுகோளை நாசாவின் ராடார்கள் படம் பிடித்திருந்தன. அவற்றை ஆராய்ந்தபோது, அந்த சிறுகோளின் வெளிவட்டப்பாதையில் ஒரு நிலவு சுற்றிவருவதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த நிலவின் அளவு சுமார் ஏழு மீட்டர் அகலம் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் இருந்து சுமார் 12 லட்சம் கிலோமீட்டர்கள் தொலைவில் இந்த சிறுகோள் சென்றபோது இரவு வானத்தில் இது தெளிவாக தெரிந்ததாக நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கும் நிலவுக்கும் இடையில் இருக்கும் தூரத்தைவிட இந்த தூரம் மூன்று மடங்கு அதிகமான தூரம்.
200 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த சிறுகோள் பூமிக்கு இவ்வளவு அருகில் வந்திருக்கிறது.
அடுத்த பத்தாண்டுகளுக்கு இன்னொருமுறை வேறு எந்த சிறுகோளும் பூமிக்கு இவ்வளவு அருகில் வராது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கு அருகில் இருக்கும் சிறுகோள்களில் சுமார் 16 சதவீத சிறுகோள்களுக்கு தனித்தனி நிலவுகள் இருப்பதாக வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.