நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் பூச்சிமருந்து
நாம் நமது வீட்டு சமையலில் 25 விதமான காய்கறிகளை பயன்படுத்திவருகிறோம். அவை பெரும்பாலும் விஷத்தன்மையோடுதான் விற்பனைக்கு வருகின்றன. நாமும் விஷ கலப்போடுதான் அவைகளை வாங்கி வருகிறோம்.
காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், அவைகளின் விளைச்சலுக்காகவும்– அவைகளை பூச்சிகள், வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பலமுறை பயன்படுத்தப்படும் அந்த விஷ மருந்துகளோடுதான் காய்கள் விளைகின்றன. அவைகளைத்தான் நாம் வாங்கி வருகிறோம். அப்படியே சமைத்து சாப்பிட்டால் விஷத்தின் தாக்குதல் ஏற்பட்டு, பல்வேறு நோய்கள் தோன்றும். அந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் நன்றாக கழுவ வேண்டும்.
எந்தெந்த காய்கறிகளை எப்படி கழுவவேண்டும் தெரியுமா?
* புதினா, கறிவேப்பிலை, கீரை போன்றவைகளை பயன்படுத்துவதற்கு முன்பு வினிகர் கலந்த கலவையில் அதை சுத்தம் செய்யவேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 20 மில்லி வினிகர் கலந்த திரவத்தில் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 30 கிராம் அளவுக்கு புளி கலந்த திரவத்தில் அவைகளை பத்து நிமிடங்கள் வைத்திருங்கள். பின்பு நன்றாக அலசி எடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரில் சுத்தமாக கழுவி பயன்படுத்துங்கள். புதினா, கறிவேப்பிலையை அதிக நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் மேற்கண்ட முறையில் சுத்தம் செய்து தண்ணீர் வடிய வசதியுள்ள பாத்திரத்தில் இரவு முழுவதும் வைத்திருங்கள். பின்பு காட்டன் துணியில் பொதிந்து, பிளாஸ்டிக் பாத்திரத்தில் அடைத்து பிரிட்ஜில் வைத்து தேவைக்கு பயன்படுத்துங்கள்.
முட்டைகோஸ் வாங்கியதும் அதன்மேல் பகுதியில் இருக்கும் மூன்று அல்லது நான்கு அடுக்கு இதழ்களை அப்புறப்படுத்திவிடுங்கள். பின்பு பலமுறை நீரில் கழுவிவிட்டு, சுத்தமான துணியால் துடைத்தெடுத்துவிட்டு பயன்படுத்துங்கள்.
* நெல்லிக்காய், கோவக்காய், புடலை போன்றவைகளை மென்மையான ஸ்கிரப் பேடு பயன்படுத்தி தேய்த்து கழுவுங்கள். பின்பு மேற்கண்ட ஏதாவது ஒரு திரவத்தில் பத்து நிமிடம் முக்கிவைத்துவிட்டு, துடைத்து பயன்படுத்துங்கள்.
* மல்லித்தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுங்கள். அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திரத்தில் கொட்டி பிரிட்ஜில் வைத்திருங்கள். உபயோகப்படுத்துவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பு வினிகர் கலவையில் முக்கிவைத்து, பின்பு பலமுறை தண்ணீரில் கழுவி பயன்படுத்துங்கள். உப்பு கரைசலிலும் இதனை முக்கிவைத்து பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் நீரில் 20 கிராம் கல் உப்பை கரைத்து, உப்பு கரைசல் திரவத்தை உருவாக்கவேண்டும்.
* முருங்கைகாய், பீட்ரூட், கேரட் போன்றவைகளை பலமுறை தண்ணீரில் கழுவுங்கள். பின்பு தண்ணீரை துடைத்துவிட்டு, காட்டன் துணியை சுற்றி பிரிட்ஜில் வையுங்கள். உபயோகிப்பதற்கு முன்பு அவைகளை வெளியே எடுத்து, மேல் தோலை லேசாக சுரண்டி எடுத்துவிட்டு நன்றாக கழுவி பயன்படுத்துங்கள்.
* வெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாவக்காய், சுரைக்காய் போன்றவைகளை துணிதுவைக்க பயன்படுத்தும் மென்மையான பிரஷ் மூலம் லேசாக உரசி தண்ணீரில் கழுவுங்கள். சில தடவை தண்ணீரில் அலசிவிட்டு, வினிகர் அல்லது புளி திரவத்தில் பத்து நிமிடங்கள் முக்கிவைத்துவிட்டு பின்பு கழுவி, துடைத்து பயன்படுத்துங்கள்.
* காலிபிளவரில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாக பெயர்த்து எடுங்கள். அவைகளை வினிகர் அல்லது உப்பு திரவத்தில் பத்து நிமிடம் முக்கிவைத்துவிட்டு பின்பு பலமுறை கழுவி பயன்படுத்தவேண்டும்.
* பூண்டு, சிறிய வெங்காயம், இஞ்சி போன்றவைகளில் இருக்கும் மேல் தோலை நீக்கிவிட்டு பலமுறை நீரில் கழுவிவிட்டு உபயோகப்படுத்தவேண்டும்.
* மிளகாய், குடை மிளகாய், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் போன்றவைகளை மேற்கண்ட கலவையில் ஏதாவது ஒன்றில் பத்து நிமிடங்கள் முக்கி வைத்திருங்கள். பின்பு பலமுறை கழுவி, இரவு முழுவதும் தண்ணீர் வடியும் பாத்திரத்தில் வையுங்கள். பின்பு அதில் இருக்கும் தண்ணீரை துணியால் துடைத்துவிட்டு பயன்படுத்துங்கள்.