புற்றுநோய்: தவறான பழக்கங்களால் வருகிறதா? தானாகவே வருகிறதா?
மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களில் மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்கள் அவர்களின் உடலில் இயற்கையாக நடக்கும் மரபணு மாற்றம் காரணமாக நடப்பதாகவும், இந்த வகை புற்றுநோய்களுக்கும், ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளிட்ட மோசமான பழக்க வழக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
அதேசமயம், மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படுகின்றன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
எனவே புற்றுநோயை தோற்றுவிக்கும் அல்லது ஊக்குவிக்கும் மனிதர்களின் தவறான பழக்கவழக்கங்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கும் இந்த ஆய்வாளர்கள், அத்தோடு கூட மரபணுக்களில் ஏற்படும் விபரீத மாற்றங்களால் மட்டுமே உருவாகும் மூன்றில் இரண்டுபங்கு புற்றுநோய்களை அவற்றின் தோற்றத்தின் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை முயற்சிகளையும் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.
"மரபணுக்களின் விபரீத மாற்றங்களே எலும்பு புற்றுநோய்க்கு காரணம்" "மரபணுக்களின் விபரீத மாற்றங்களே எலும்பு புற்றுநோய்க்கு காரணம்"
மனிதர்களுக்கு புற்றுநோய் வருதற்கு அடிப்படை காரணம் அவர்களின் உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் விபரீத மாற்றம். நம் உடலில் இருக்கும் எல்லா அங்கங்களிலும் வயதான மற்றும் சேதமடைந்த செல்கள் மடிந்து மறைவதும் அவற்றின் இடத்தை புதிய செல்கள் வளர்ந்து நிரப்புவதும் இயல்பாக தொடர்ந்து நடக்கும் அன்றாட செயல். நம் உடலில் இருக்கும் குருத்தணுக்களில் இருந்து இப்படி புதிய செல்கள் தோன்றி வளரும் சமயத்தில் சில செல்களில் மட்டும் ஏற்படும் விபரீதமான மரபணு மாற்றமானது, அவற்றை புற்றுநோய் தோற்றுவிக்கும் செல்களாக மாற்றிவிடுகிறது என்பது விஞ்ஞானிகளின் விளக்கம்.
இப்படியாக குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் திடீரென புற்றுநோய்க்கான செல்களாக மாறுவது ஏன் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். உடலில் தோன்றும் எத்தனையோ கோடி செல்களில் குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் ஏன் இப்படி நடந்துகொள்கின்றன என்பது இவர்களின் ஆய்வின் மையப்பொருள்.
இந்த ஆய்வின் முடிவு தற்போது சயின்ஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மூன்றில் இரண்டு மடங்கு புற்றுநோய்கள் இப்படி செல்களுக்குள் நடக்கும் விபரீத மரபணு மாற்றம் காரணமாகவே உருவாவதாகவும் அதற்கும் ஒருவரின் பழக்க வழகங்களுக்கும் நேரடி தொடர்புகள் இல்லை என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
"புகைபிடித்தல் கல்லீரல் புற்றுநோயை தூண்டும்"
"புகைபிடித்தல் கல்லீரல் புற்றுநோயை தூண்டும்"
அதேசமயம், மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவர் உண்ணும் தவறான உணவுகள், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற தவறான பழக்கங்களால் ஊக்குவிக்கப்படுவதையும் இவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
எனவே ஒருவருக்கு புற்றுநோய் வருவது என்பது அடிப்படையில் அவரது உடலில் இருக்கும் செல்கள் தம்மை புதுப்பித்துக்கொள்ளும் நடைமுறையில் இருந்து ஆரம்பிப்பதாக இந்த ஆய்வை மெற்கொண்ட ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளி மற்றும் பொது சுகாதாரத்திற்கான புளூம்பெர்க் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வின் அடிப்படையில் புற்றுநோய்களை இரண்டு வகையானவைகளாக பிரிக்கலாம். அதாவது, ஒருவரின் செல்களில் நடக்கும் விபரீத மரபணு மாற்றத்தால் உருவாகும் புற்றுநோய்கள் மற்றவை ஒருவரின் பழக்கவழங்களால் தூண்டப்படும் புற்றுநோய்கள்.
இதில் ஒருவரின் மரபணுவில் ஏற்படும் மாற்றம் காரணமாக உருவாகும் முக்கியமான புற்றுநோய்கள் என்பவை மூளையில் தோன்றும் ஒரு புற்றுநோய், வயிற்றின் சிறுகுடலில் தோன்றும் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய் ஆகியவை என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட புற்றுநோய்கள் தோன்றாமலே தடுப்பது என்பது இன்றைய நிலையில் இயலாது என்னும்போது அவை தோன்றுவதை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிப்பது அவற்றை குணப்படுத்த உதவும் என்கிறார் இந்த ஆய்வாளர்களில் ஒருவரான கிறிஸ்டியன் டோமசெட்டி.
அதேசமயம் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படும் புற்றுநோய்கள் என்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பனவற்றில் ஒருவகை தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், குதப்புற்றுநோய் ஆகியவை முக்கியமானவை
"மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்களுக்கு மனித தவறுகள் காரணமல்ல" "மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்களுக்கு மனித தவறுகள் காரணமல்ல" இதில் குறிப்பிட்ட ஒருவகை தோல் புற்றுநோய் சூரிய ஒளியில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் தூண்டப்படுகிறது; புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோயை தூண்டுகிறது, மோசமான உணவுப்பழக்கம் மற்றும் குடும்ப மரபணுக்களால் குதப்புற்றுநோய் தூண்டப்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
எனவே சிலவகையான புற்றுநோய்கள் வேண்டுமானால் விபரீத மரபணு மாற்றங்கள் காரணமாக உருவாகலாம். ஆனால் மற்றவகை புற்றுநோய்களை ஒருவரின் பழக்கவழக்கங்கள் தூண்டுகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார் ஐக்கிய ராஜ்ஜியத்தின் புற்றுநோய்க்கான ஆய்வு மையத்தின் மருத்துவர் எம்மா ஸ்மித். இவை தவிர பரவலாக மனிதர்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய் மற்றும் புராஸ்டேட் சுரப்பிகளில் தோன்றும் புற்றுநோய்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
எனவே புற்றுநோயை ஊக்குவிக்கும் பழக்கவழக்கங்களை தவிர்ப்பது, மற்றும் புற்றுநோய்களை அவற்றின் ஆரம்பகட்டங்களிலேயே கண்டுபிடித்து உடனடி சிகிச்சை அளிப்பது ஆகிய இரண்டுவகையான அணுகுமுறைகளும் சம அளவில் கைக்கொள்வதே உலக அளவில் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக பார்க்கப்படும் புற்றுநோயை கையாள்வதற்கான மருத்துவ வழிமுறைகள் என்பது இந்த ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
துரதிருஷ்டத்தால் வரும் புற்றுநோய் வகைகள்
உடலின் சில திசுக்கள் ஏனைய திசுக்களைவிட மிக இலகுவாக புற்றுநோய் கிருமிகளால் தாக்கப்பட்டுவிடுகின்றன. அவை ஏனைய பல திசுக்களைவிட பல லட்சக்கணக்கான மடங்கு இலகுவாக புற்றுநோய்க் கிருமிகளின் தாக்குதலுக்கு இலக்காகிவிடுகின்றன. இது ஏன்? என்பதை அறிய ஆய்வாளர்கள் பல பரிசோதனைகளை நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவுகளின்படி, புற்றுநோய் வகைகளில் மூன்றில் இரண்டு பங்கானவை காரணம் எதுவும் இன்றி எதேச்சையாகவே தொற்றிவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், மிகவும் உயிராபத்தை விளைவிக்கக்கூடிய சில வகை புற்றுநோய்கள் புகைத்தல் போன்ற, எமது தீய பழக்க வழக்கங்களாலேயே ஏற்படுகின்றன.
ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் எப்போதுமே கொடிய வகை புற்றுநோய்களில் இருந்து உங்களை காக்கும் என்று கான்ஸர் ரிசேர்ச் யூகே என்ற அமைப்பு கூறுகின்றது.
Thanks BBC