சூரியனுக்கு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டம் மயில்சாமி அண்ணாதுரை
சூரியனுக்கு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக மங்கள்யான், சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டயக் கணக்காளர் மாணவர்களுக்கான சர்வதேச கருத்தரங்கில் அவர் பேசியது:
விண்வெளித் துறையில் இந்தியா அண்மைக் காலமாக பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. எந்த ஒரு புதிய முயற்சியின்போதும் பல்வேறு தடைகள் ஏற்படும். அவற்றை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். விண்கலத்தை அனுப்புவது அறிவியல் வல்லுநர்களுக்கு எவ்வளவு சிரமமோ, அதே போலத்தான் பட்டயக் கணக்காளர் தேர்வில் வெற்றி பெறுவதும். என்றாலும், மாணவர்கள் தங்களது இலக்குகளை நோக்கி தன்னம்பிக்கையோடு செயல்படவேண்டும்.
மங்கள்யான் பயணத்தை இந்திய அறிவியல் வல்லுநர்கள் 13 மாதத்தில் திட்டமிட்டு, குறைந்த நிதிச் செலவில் விண்கலத்தை அனுப்பி வைத்தனர். ஆனால், அறிவியலில் வல்லரசாக திகழும் அமெரிக்கா, இதேபோன்ற விண்கலத்தை அனுப்ப 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.
இந்தியர்கள் திறமைசாலிகள் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. தற்போது, மங்கள்யான் பயணம் மூலம் செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளோம். அடுத்த முயற்சியாக சூரியனை பற்றி ஆராய்ச்சி செய்ய விண்கலத்தை ஏவ முடிவு செய்துள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில், இந்திய பட்டயக் கண்காளர் சங்கத் தலைவர் கே.ரகு, துணைத் தலைவர் மனோஜ், தென் மண்டலத் தலைவர் ராஜராஜேஸ்வரன், பெங்களூரு கிளைத் தலைவர் தேவர், பொருளாளர் கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நன்றி தினமணி