நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்படுகிறது
வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலை யில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு வார்டு வரையறை செய்யப்பட்டு உள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை ஒதுக்கும் பணியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தேர்தல் அறிவிப்பை இம்மாத இறுதியில் வெளியிட, மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. ஆனால், தலைநகர் சென்னையில் துவங்கி கன்னியாகுமரி வரை, வடகிழக்கு பருவமழை பரவலாக கொட்டி தீர்த்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகள், அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே, தேர்தல் அறிவிப்பை தள்ளிப்போடுவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.அதேநேரத்தில், பேரூராட்சி, நகராட்சி தேர்தலை மட்டும் நடத்தலாம் என்ற யோசனையில் அரசு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி முடிவெடுக்கப்பட்டால், பேரூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகலாம்.