பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!
இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 500 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் தொடர்ந்து வருகிறது. இரண்டின் விலை ரூ.100 தாண்டிவிட்ட நிலையில் தொடக்கத்தில் இதற்கு நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில் தற்போது அதற்கு பழகிவிட்டனர். இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.17 மற்றும் டீசலில் லிட்டருக்கு ரூ.35 என்ற அளவில் இழப்பை எதிர்கொண்டதாக கூறின. அப்போது உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் நீடித்து வந்தது. இதன் மூலம் தற்போது ஓஎம்சிக்கள் என்று சொல்லப்படும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.8-10 லாபமும், டீசலில் லிட்டருக்கு ரூ.3-4 லாபமும் ஈட்டி வருகின்றன.
எண்ணெய் நிறுவனங்கள் தற்போது லாபம் ஈட்டி வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு சிறிது நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து அரசு விவாதிக்கத் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தற்போதைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் குறித்து ஆலோசித்து வருகின்றன. கடந்த மூன்று காலாண்டுகளில் எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் ஈட்டியுள்ளன. இதனால் அவற்றின் மொத்த இழப்பு குறைந்து உள்ளது.
கடந்த காலாண்டில் மட்டும் இந்தியன் ஆயில், எச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த லாபம் மட்டும் ரூ.28,000 கோடியாக உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ஈடு செய்யப்பட்டுவிட்டதால், நுகர்வோரும் அந்த பலனை அடைய வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது விலை குறைப்பு தொடர்பான ஆலோசனை தொடங்கி உள்ளது.
இந்த வார தொடக்கத்தில், கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் சரிவை சந்தித்தது. ஒபேக் நாடுகள் எண்ணெய் விநியோகிப்பதன் அளவு குறைந்ததால், அதன் கால அளவு குறித்த நிச்சயமற்ற தன்மை தொடர்ந்து நீடித்து வந்ததாலும், எண்ணெய்க்கான தேவை குறையும் என்ற தகவல் காரணமாகவும் இந்த விலை குறைந்ததாக கூறப்படுகிறது.