மென்மையே மேன்மை தரும்!

நம்மீது தவறிழைப்பவர்களது மனம் புண்படாமல் அவர்களது தவற்றை நாசூக்காய் சுட்டிக்காட்டி, அதே நேரத்தில் அவர்கள் நம்மீது கோபமோ, வருத்தமோ படாமல் செய்வது என்பது ஒரு தனிக்கலை.
அந்தச் சாதுர்யம் எல்லோருக்கும் கை வராது என்றாலும், அதை வரப்படுத்த நாம் முயலவேண்டும். ஒருமுறை ஒரு பிரபல போட்டோ கிராபர் ஒரு பிரபல நடிகையை படமெடுக்கச் சென்றிருந்தார். அந்த நடிகையோ பல ஆண்டுகளாகச் சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்தவர். இவரும் போட்டோவை எடுத்து பின்பு நடிகையைச் சந்தித்துப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
படத்தை உற்று நோக்கிய நடிகையின் முகத்தில் ஏமாற்றம் தென்பட்டது. நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னை எடுத்த போட்டோவைப்போல இது அழகாய் இல்லையே என்றிருக்கிறார்.
புகைப்பட நண்பருக்கோ மனதில் ஒரே கோபம் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இளமையாக இருந்த நடிகை அதே இளமையுடன் அழகோடு இன்று இல்லை என்றால் அது யார் குற்றம்?
ஆனால் நண்பர், முகத்தில் அடித்ததுபோல் அந்த உண்மையை சொல்லிவிடவில்லை. மாறாக "மன்னித்துக் கொள்ளுங்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இதைவிட இளமையா இருந்தேன் அல்லவா? அதனால் துடிப்போடு அப்போது படம் எடுத்து இருக்கிறேன். இப்போது எனக்கு வயதாகி விட்டதல்லவா? அதனால் முன்மாதிரி திறமையை போட்டோ எடுக்க முடியாமல் போயிருக்கும் என்றாராம்.
நடிகைக்கு மனதிற்குள் இது தைத்திருக்கும் இருந்தாலும் அசட்டு சிரிப்பு சிரித்து மழுப்பிவிட்டாராம்.
நண்பர் பேசிய பேச்சும் நடந்து கொண்ட விதமும் இருக்கிறதே அதுதான் சாதுர்யம். சார்லஸ் ஸ்வாப் என்பவர் பல இரும்பாலைகளுக்கு சொந்தக்காரர்.
ஒருமுறை பகலுணவின்போது ஆலைகளை பார்வையிட சென்றார்.
அப்போது பல தொழிலாளர்கள் இயந்திரங்களுக்கு அருகில் நின்று புகை பிடிப்பதைக் கண்டார். அவர்கள் தலைக்கு மேலேயே புகை பிடிக்காதீர்கள் என்ற அறிவிப்புப் பலகை இருந்தது.
இருப்பினும் சார்லஸ் மேலே போர்டு இருக்கிறதே, புகைப்பிடிக்க கூடாது என்று? உங்களுக்கு அறிவில்லையா? படிக்கத் தெரியாதா? என்றெல்லாம் கத்தவில்லை.
மாறாக தன் பையிலிருந்த விலையுயர்ந்த சுருட்டுப் பெட்டியை எடுத்துப் பிரித்து அங்கிருந்தவர்களுக்கு ஒவ்வொன்றாய் எடுத்துக்கொடுத்து "ரொம்ப அருமையான சுருட்டு இது. பிடித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள், ஆனால், இதை நீங்கள் இங்கேயே புகைக்காமல் வெளியே சென்று பிடியுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
தொழிலாளர்களுக்கு ஒரே வெட்கம் அன்றைய தினத்திலிருந்து ஆலைக்குள் எவரும் புகை பிடிக்கவேமில்லை. சார்லஸின் சாதுர்யம் எதிர்பார்த்த பலனைத் தந்துவிட்டது.
ஜான் வானகர் என்பவருடைய சாதுரியத்தை பாருங்கள். இவர் பிலடெல்பியாவில் பல பெரும் அங்காடிகளுக்குச் சொந்தக்காரர். தினந்தோறும் எல்லா அங்காடிகளையும் பார்வையிடுவார். அப்படி ஒருமுறை வந்த போது, ஒரு பெண்மணி ஒரு கடையில் கவனிப்பாரற்று நிற்பதைக் கண்டார். இந்தக் கடையைக் கவனிக்க வேண்டிய ஆசாமியோ கொஞ்ச தூரத்தில் மற்ற தொழிலாளர்களுடன் நின்றுகொண்டு அரட்டையடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.
ஜான் டக்கென்று அந்தக் கடையில் நுழைந்து, 'மன்னியுங்கள். நான் சற்று வேலையாய் இருந்தேன். உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கூறி அந்தப் பெண்மணி வாங்கிய பொருள்களுக்கு ரசீது போட்டு பணம் வாங்கிக்கொண்டார். இதைக் கண்ட சிப்பந்தி அன்றைய தினத்திலிருந்து அரட்டை அடிப்பது கிடையாது.