அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு பொது தேர்வு மையம் அனுமதிக்கப்படாது
அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளில், பொது தேர்வு மையங்கள் அனுமதிக்கப்படாது என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில், வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வு பணிகளை, அரசு தேர்வு துறை துவங்கியுள்ளது.இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நடப்பு கல்வியாண்டில் நடத்தப்பட உள்ள பொது தேர்வுக்கு, தேர்வு மையங்கள் அமைய உள்ள பள்ளிகளை உரிய விதிப்படி முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள், 10 கி.மீ.,க்கு மேல் பயணம் செய்து தேர்வு எழுதும் நிலை இருந்தால், அந்தப் பகுதியில் தேர்வு மையம் அமைக்கப்பட வேண்டும்.அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க அனுமதிக்கப்படாது.
அதேநேரம் நீதிமன்ற உத்தரவு மற்றும் தொடர் அங்கீகார விலக்கு பெற்றுள்ள பள்ளிகளை தனியாக பட்டியலிட்டு பரிந்துரைக்க வேண்டும். ஓராண்டுக்கு மட்டும் தேர்வு மையம் அமைத்த பள்ளிகளில், மீண்டும் தேர்வு மையம் வேண்டும் என்றால் அதற்கான காரணங்களை உரிய முறையில் பரிந்துரைக்க வேண்டும். புதிதாக தேர்வு மையங்கள் தேவைப்படும் பள்ளிகளை முழுமையாக ஆய்வு செய்து, அங்கு விதிப்படி தேவையான கட்டமைப்புகள் இருப்பதை உறுதி செய்து உரிய அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.