ஆன்லைன் வழியே கல்வி கற்க யு.ஜி.சி. அங்கீகாரம் அளித்துள்ளது
ஆன்லைன் வழி பட்டப் படிப்புகள், வழக்கமான பட்டப் படிப்புகளுக்கு இணையாக கருதப்படும் என, யு.ஜி.சி., அறிவித்து உள்ளது.
பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டில், நாடு முழுதும் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுகின்றன.ஒவ்வொரு கல்லுாரியும், பல்கலையும் பட்டப் படிப்புகளை நடத்த, யு.ஜி.சி.,யின் ஒப்புதல் பெற வேண்டும்.இந்நிலையில், ஆன்லைன் வழியில் பட்டப் படிப்பு நடத்தும் கல்லுாரிகள், முன் அனுமதி எதுவும் பெற தேவையில்லை என, யு.ஜி.சி., சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்தவர்கள் எந்த பட்டப் படிப்பிலும், ஆன்லைன் வழியில் படிக்கலாம்.
இதற்கு கல்லுாரிகள் தரப்பில், ஆன்லைன் வழி தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கலாம்.வழக்கமான பட்டப் படிப்புகளுக்கு இணையாக, ஆன்லைன் வழி படிப்புகள் கருதப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.மேலும், வழக்கமான கல்லுாரி படிப்புகளில் உள்ள, 75 சதவீதம் வருகைப் பதிவு கட்டாயம் என்ற விதியும், ஆன்லைன் படிப்பில் தளர்த்தப் பட்டுள்ளது. இதற்கான புதிய விதிகள் மற்றும் விபரங்கள், அடுத்த மாதம் வெளியிடப்படும் என, யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.