உள்ளத்தனையது உயர்வு

வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான பண்புகளுள் குறிப்பிடத்தக்க நற்பண்பு ஊக்கம் ஆகும்.
சோம்பலின் இழிவைப் பற்றி மடியின்மை அதிகாரத்திலும்,
முயற்சியின் பெருமையை ஆள்வினையுடைமை
அதிகாரத்திலும்
மன உறுதி பற்றி வினைத் திட்பம் அதிகாரத்திலும் பேசிய திருவள்ளுவர் ஊக்கமுடைமை அதிகாரத்தில் ஊக்கத்தின் சிறப்பியல்புகளைப் பேசியுள்ளார்.
ஊக்கம் என்பது ஒருவருக்கு பல நிலைகளில் ஏற்படலாம். பட்டம் உயரே பறப்பதற்கு காற்று மிகவும் தேவையாகிறது.
அதுபோல மனிதர்கள் உயர ஊக்கம் தேவைப்படுகிறது ஊக்கத்தை மனதின் எழுச்சி, புத்துணர்ச்சி, உற்சாகம் என பலவாறு அழைக்கிறோம்..
ஊக்கத்தை உள் ஊக்கம், புற ஊக்கம் எனப் பிரிக்கலாம். உள் ஊக்கமானது மனதளவில் தோன்றக்கூடியது.. புற ஊக்கம் நம்மைச் சுற்றியுள்ளவர்களாலும் சூழல்களாலும் தோன்றுகிறது.ஊக்கமது கைவிடேல் என்றார் ஔவையர். ஊக்கத்தை எப்போதும் கைவிடக் கூடாது என்பதுதான் இதன் பொருள்
ஆனால் ஊக்கம் தரும் மதுவைக் கைவிடேல் எனச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு மது ஊக்கம் தருகிறது என்று நம்புகிறார்கள்.
மேலும் மதுவைப் போல பல போதைப் பொருள்கள் ஊக்கம் தருவதாக நம்புவோர் பலர் உள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் கூட விளையாட்டு வீரர்கள், ஊக்கம் தரும் உணவுப்பொருள்களோ, போதைப் பொருள்களோ பயன்படுத்தியுள்ளனரா என சோதிப்பது வழக்கமாக உள்ளது.
ஊக்கம் ஒருவருக்கு எப்படித் தோன்றுகிறது.. புத்தக வாசிப்பு, தன்னம்பிக்கைச் சொற்பொழிவு, இசை, நண்பர்களுடன் பேசுதல், விளையாட்டு, நடைப் பயிற்சி என மனதுக்குப் பிடித்த எந்த ஒரு செயலும் ஒருவருக்கு ஊக்கத்தை தோற்றுவிக்கலாம்.
தூங்குவதால் கூட ஊக்கம் பிறக்கிறது என்று சிலர் கருதுவதுண்டு. எந்த ஒரு செயலும் தொடர்ந்து செய்யும் போது சோர்வு தோன்றும். ஊக்கத்துடன் செய்கிறேன் என்று தொடர்ந்து செய்வதால் அந்த செயல் முழுமையடையாமல் போவதும் உண்டு.
அதனால் ஊக்கம் என்ற உள்ளுணர்வை முதலில் நாம் உணரவேண்டும். ஊக்கத்துடன் எதை நோக்கிச் செல்கிறோம் என்ற இலக்கு குறித்த தெளிவு வேண்டும் மேலும் ஊக்கத்துடன் தொடர்புடைய முயற்சி, ஆர்வம் ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்வது சிறப்பு.
தமக்கு உயர்வு வேண்டி மனத்தில் எழுச்சி கொள்ளுதல் இனிமையைத் தரும் என்னும் பொருளில் "உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே" என்றார் பூதஞ்சேந்தனார்.
மனவுறுதி இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பதை,
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.- 666 என்ற திருவள்ளுவர்.
சொல்லுவது யார்க்கும் எளிது, சொல்லியபடி செய்துமுடிப்பதே அரிது என்று ஏன் சொன்னார் என்று சிந்தித்தால் மன உறுதியும் ஊக்கமும் கொண்டவர்களே சொல்லியபடி செய்வார்கள் என்று புரியும்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
ஊக்கம் உடையவர்களே அரிய செயல்களைச் செய்யும் பெரியவர்களாவர். ‘மனதில் உறுதி வேண்டும்“ என்றும்,
“விசையுறு பந்தினைப்போல்-உள்ளம் வேண்டிய படிசெல்லும் உடல்கேட்டேன்,“ என்றும் பாரதியார் பாடியுள்ளார்
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் என்றார் கவிஞர் கண்ணதாசன்.
எல்லாம் மனதின் செயல்தான்.