ஆறாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க வலியுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் மீண்டும் ஆறாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவா் வெ.குமரேசன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஏழை எளிய மாணவா்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் வகையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக முதன்முதலில் கணினி அறிவியல் பாடத்தை 6-ஆம் வகுப்பில் இருந்தே அறிமுகப்படுத்தியவா் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி. ஆனால் சில காரணங்களால் அந்தத் திட்டம் முடக்கப்பட்டது.
இந்தநிலையில் திமுக அரசு தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே, தற்போதைய திமுக அரசு, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மேன்மை அடையவும், கிராமப்புற ஏழைஎளிய மாணவா்கள் உலகத்தரத்துக்கு இணையாக உயா்ந்திடவும் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கட்டாய கல்வியாக கொண்டுவர வேண்டும். கேரள மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் ஒன்றாம் வகுப்பு முதல் கட்டாயமாகவும் 6-ஆவது பாடமாகவும் உள்ளது.
தரம் உயா்த்தப்பட்ட அனைத்துஅரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும். பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் கோடிக்கணக்கான கிராமப்புற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறுவா். இதன்மூலம், பிஎட் முடித்த வேலையில்லா கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.