கையில் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!

நம்மில் பலர் நம் கையில் இருக்கும் நல்ல விஷயங்களை வைத்து மகிழ்ச்சியடையாமல் நமக்கு கிடைக்காத விஷயங்களை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம். போதும் என்று நினைக்கும் மனமே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். எனவே, இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழக்கற்றுக் கொள்ளுங்கள். இதை தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் குமார் விடியற்காலை நான்கு மணி அளவில் ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்தான். அப்போது அங்கே இருட்டில் ஒரு மூட்டை நிறைய கல் இருப்பதை பார்த்தான். அந்த ஆற்றங்கரை ஓரமாகவே அமர்ந்து அந்த மூட்டையில் இருக்கும் கல் ஒவ்வொன்றாக எடுத்து ஆற்றில் வீசினான்.
நேரமும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துக் கொண்டிருந்தது. குமாரும் ஒவ்வொரு கல்லாக எறிந்துக் கொண்டிருந்தான். கடைசி கல்லை எறியும் போது விடிந்து விடுகிறது. அப்போது சூரிய ஒளி அவன் கையில் இருக்கும் அந்த கல்லின் மீது படுகிறது. சூரிய ஒளிப்பட்டதும் அந்த கல் ஜொலிக்கத் தொடங்குகிறது. அப்போதுதான் குமாருக்கு புரிந்தது அந்த மூட்டை நிறைய இருந்த கற்கள் எல்லாம் வைரக்கற்கள் என்பது.
இது தெரிந்ததும், 'அந்த மூட்டையில் இருந்த எல்லா கற்களையும் ஆற்றுக்குள் வீசிவிட்டோமே!' என்று அழ ஆரம்பிக்கிறான். அப்போது அந்த வழியாக போன துறவி ஒருவர் குமார் அழுவதைப் பார்த்துவிட்டு, ‘ஏன் அழுகிறாய்?’ என்று கேட்கிறார். குமார் நடந்த அனைத்தையும் துறவியிடம் கூறுகிறான்.
அதைக்கேட்ட துறவி, 'அந்த சூரியன் இப்போது உதிக்கவில்லை என்றால், உன்னிடம் இருந்த கடைசி கல்லையும் நீ எறிந்திருப்பாய்! அந்த மூட்டையில் என்ன இருந்தது என்றே உனக்கு தெரியாமல் போயிருக்கும். உன்னுடைய நல்ல நேரம் சரியாக நீ கடைசி கல்லை எறியும் போது சூரியன் உதித்திருக்கிறது.
இதுவும் விலை மதிப்பில்லாத கல் தானே! இந்த ஒரு கல்லாவது மிஞ்சியதே என்று சந்தோஷப்படாமல் ஏன் போனதை நினைத்து வருத்தப்படுகிறாய்?' என்று கேட்டார். இதைக்கேட்டதும்தான் குமாருக்கு தெளிவு பிறந்தது. அழுகையை நிறுத்திவிட்டு வீட்டிற்கு மகிழ்ச்சியாக செல்கிறான்.
இந்தக் கதையில் வந்ததுபோலத்தான், நம் வாழ்க்கையிலும் கையில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையாமல் இழந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த கருத்தை தெளிவாக புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.